ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம்: மக்களவை செயலாளருக்கு டி.ஆர்.பாலு கடிதம்
|ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி நாடாளுமன்ற மக்களவை செயலாளருக்கு மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் கொடுத்துள்ளார்.
புதுடெல்லி,
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பல பேர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். பலர் இதனால் தற்கொலையும் செய்துகொண்டனர். எனவே ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் ஐகோர்ட்டு அந்த சட்டத்தை ரத்து செய்தது.
அவசரசட்ட மசோதா
இந்த நிலையில் தேர்தல் வந்தது. தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., 'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசரசட்ட மசோதா'வை உருவாக்கி, அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றது. தொடர்ந்து இந்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த சட்டத்தை சட்டசபையில் 6 மாத காலத்துக்குள் தீர்மானமாக நிறைவேற்றி மீண்டும் கவர்னரின் ஒப்புதலை பெற வேண்டும் என்பதால், கடந்த அக்டோபர் மாத கூட்டத்தொடரில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
கவர்னர் திருப்பி அனுப்பினார்
அதில் பல்வேறு விளக்கங்களை கவர்னர் கேட்டார். அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த டிசம்பர் 2-ந் தேதி கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் சட்டம் இயற்றி 5 மாதங்கள் ஆகும் நிலையில், அதன் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு அவர் திருப்பி அனுப்பியுள்ளார். மத்திய அரசின் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உள்ளிட்ட கேள்விகளையும் அவர் எழுப்பி இருக்கிறார்.
இது தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக அமைச்சரவை கூட்டப்பட்டு, இதுகுறித்த அடுத்தகட்ட நகர்வுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.
கடிதம்
இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இக்கூட்டத்தொடரின் முதல் நாளில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு மக்களவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி இருப்பதாகவும், எனவே அதற்கு தடை விதிப்பது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.