< Back
தேசிய செய்திகள்
வீடு புகுந்து ராஜஸ்தான் தம்பதியை கொல்ல முயற்சி
தேசிய செய்திகள்

வீடு புகுந்து ராஜஸ்தான் தம்பதியை கொல்ல முயற்சி

தினத்தந்தி
|
18 Aug 2023 3:16 AM IST

மைசூருவில் வீடு புகுந்து ராஜஸ்தான் தம்பதியை கொல்ல முயன்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மைசூரு:-

ராஜஸ்தானை சேர்ந்த தம்பதி

மைசூரு (மாவட்டம்) டவுன் ஊட்டஹள்ளி பகுதி கே.எச்.பி. காலனியில் வசித்து வருபவர் பாபுலால் (வயது 57). இவரது மனைவி கமலாபாய்(52). இவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்.

சம்பவத்தன்று அவர்களது வீட்டிற்கு மர்மநபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது விஷேச நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ் கொடுக்க வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த நபர், கமலாபாயிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அவர் தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாபுலாலை சரமாரியாக தாக்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கமலா பாய் அவரை தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரை மர்மநபர் கத்தியால் தாக்கி உள்ளார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதில் அவர்கள் 2 பேரும் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்கள் கத்தும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனை அறிந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் பாபுலாலின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மர்மநபருக்கு வலைவீச்சு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் விஜயநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், ஆஸ்பத்திரிக்கு சென்றும் விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக மர்மநபர் பாபுலாலையும், அவரது மனைவியையும் கொலை செய்ய முயன்றிருக்கலாம் என போலீசார் சந்தேக்கிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்