கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயற்சி-மந்திரிகள் பரபரப்பு குற்றச்சாட்டு
|வால்மீகி வளர்ச்சி நிதி முறைகேட்டில் அமலாக்கத்துறை விசாரணை மூலம் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடப்பதாக பா.ஜனதா மீது மந்திரிகள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.
பெங்களூரு,
வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, தகவல் தொழில்நுட்ப மந்திரி பிரியங்க் கார்கே, மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், சுகாதாரத்றை மந்திரி தினேஷ் குண்டுராவ், தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் லாட் ஆகியோர் பெங்களூருவில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
வால்மீகி வளர்ச்சி நிதி முறைகேட்டில் சிலரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் ஆட்சியில் உயர் பதவியில் உள்ளவர்களின் பெயரை கூறும்படி அழுத்தம் கொடுப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அதற்கு எங்களிடம் ஆதாரமும் உள்ளது. அதை அடுத்து வரும் நாட்களில் வெளியிட தயாராக உள்ளோம். முக்கிய நபர்களின் பெயரை கூறினால் உங்களை வழக்கில் இருந்து காப்பாற்றுவதாகவும், இல்லாவிட்டால் அமலாக்கத்துறையின் அதிகாரம் என்ன என்று உங்களுக்கு தெரியும்தானே என்று மிரட்டுவதாக தகவல் வந்துள்ளது. இந்த அமலாக்கத்துறையின் விசாரணையை வைத்துக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். அனைத்தையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக அமலாக்கத்துறை எதிர்க்கட்சி தலைவர்களை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அமலாக்கத்துறை 10 ஆண்டுகளில் பதிவு செய்த வழக்குகளில் 95 சதவீதம் எதிர்க்கட்சி தலைவர்கள் மீதானது. முந்தைய பா.ஜனதா ஆட்சியில் போவி, தாண்டா வளர்ச்சி வாரியங்கள், தேவராஜ் அர்ஸ் சரக்கு லாரி முனைய வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளன.
அதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தாதது ஏன்?. பா.ஜனதா எந்தெந்த மாநிலங்களில் தோல்வி அடைகிறதோ அங்கு இதுபோன்ற விசாரணை அமைப்புகள் மூலம் அக்கட்சி உதவி செய்கிறது. எதிர்க்கட்சிகளின் ஆட்சியை அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை கவிழ்த்துள்ளனர். கர்நாடகம், மராட்டியம், கோவா, மிசோரம், நாகாலாந்து, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டன.
ஆந்திரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளின் ஆட்சிகளை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி அவர்களை பா.ஜனதாவில் சேர்த்துக் கொள்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார்கள். 10 ஆண்டுகளில் 444 எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா விலைக்கு வாங்கியது. அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.