காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை குத்திக் கொல்ல முயற்சி; பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் கைது
|ராமநகரில் காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை கடத்தி கொல்ல முயன்ற பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:
ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் தம்பதிக்கு 16 வயதில் மகள் இருக்கிறார். அவர், ராமநகர் டவுனில் உள்ள ஒரு கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலையில் அந்த மாணவி வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். கல்லூரி அருகே வரும் போது காரில் வந்த ஒரு மர்மநபர் திடீரென்று மாணவியை வழிமறித்தார்.
பின்னர் தன்னிடம் இருந்த கத்தியால் மாணவியை கண்மூடித்தனமாக அவர் குத்தி தாக்கினார். இதில், மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மாணவியை காரில் தூக்கி போட்டு சென்று கடத்தி சென்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஓடிவந்தனர். காரை நிறுத்துவதற்கு மக்கள் முயன்றனர். காரின் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள்.
ஆனாலும் காரை நிறுத்தாமல் அந்த நபர் அங்கிருந்து மாணவியை கடத்தி சென்று விட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநகர் டவுன் போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மாணவியை மீட்கவும் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில், ராமநகர் புறநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அந்த மாணவியை கடத்தி சென்ற நபர் சிகிச்சைக்காக அனுமதித்தார். மாணவியை கொலை செய்ய முயன்றது குறித்தும் டாக்டர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாணவிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவியின் கழுத்து, முகம், தலை உள்ளிட்ட பாகங்களில் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மாணவியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற போலீசார், அந்த நபரை பிடித்து கைது செய்தார்கள்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கனகபுராவை சேத்தன் (வயது 23) என்பதும், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராகவும், கார் டிரைவராகவும் வேலை பார்த்து வருவதும் தெரிந்தது. மேலும் அந்த மாணவியை சேத்தன் ஒரு தலையாக காதலித்துள்ளார். ஆனால் சேத்தனின் காதலை ஏற்க மாணவி மறுத்து வந்துள்ளார். இருப்பினும் தன்னை காதலிக்கும்படி சேத்தன் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
தனது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சேத்தன், மாணவியை கத்தியால் குத்திக் கொல்ல முயன்றதும், பினனர் அவரே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்ததும் தெரியவந்துள்ளது. கைதான சேத்தன் மீது ராமநகர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் ராமநகரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.