கல்லூரி மாணவியை கற்பழிக்க முயற்சி; வாலிபர் கைது
|மூடிகெரேயில் கல்லூரி மாணவியை லிப்ட் கொடுப்பதாக அழைத்து சென்று கற்பழிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு;
கல்லூரி மாணவி
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஹண்டிகுலா கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் மூடிகெரேவில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.யூ.சி படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரி முடிந்து ஊருக்கு செல்வதற்காக மூடிகெரே பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
ஆனால் வெகு நேரம் ஆகியும் பஸ் வரவில்லை என கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் மாணவி தனியாக நின்றதை பார்த்து வீட்டில் டிராப் செய்வதாக கூறி அழைத்துள்ளார். இதை நம்பிய மாணவி அவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றார்.
கற்பழிக்க முயற்சி
மூடிகெரேவை அடுத்த ஹண்டிகுலா கிராமம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்றபோது, திடீரென்று தேவராஜ் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். இதை பார்த்த மாணவி ஏன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினாய் என்று கேட்டார்.
அதற்கு தேவராஜ் பதில் எதுவும் கூறாமல் மாணவியின் மீது பாய்ந்து கற்பழிக்க முயற்சித்தார். அப்போது அவரிடம் போராடிய மாணவி, தனது கையில் வைத்திருந்த செல்போன் மூலம் பெற்றோருக்கு தகவல் அளித்தார். இதை பார்த்த தேவராஜ் அங்கு நின்றால் மாட்டி கொள்வோம் என்று பயந்து, மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டார்.
வாலிபர் கைது
பின்னர் பெற்றோர் உதவியுடன் வீட்டிற்கு சென்ற மாணவி, இது குறித்து கோனிபீடு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார் வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆங்காடி கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்று தெரியவந்தது. மாணவியின் நடவடிக்கை தினமும் நோட்டுமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று மாணவி தனியாக நின்றதை பார்த்து அவருக்கு டிராப் கொடுப்பதுபோன்று அழைத்து சென்று கற்பழிக்க முயன்றதாக தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கோனிபீடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.