< Back
தேசிய செய்திகள்
கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல்; சந்திரபாபு நாயுடுவுக்கு எச்சரிக்கை விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி
தேசிய செய்திகள்

கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல்; சந்திரபாபு நாயுடுவுக்கு எச்சரிக்கை விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி

தினத்தந்தி
|
7 July 2024 11:56 AM GMT

ஆந்திர பிரதேசம் முழுவதும் தெலுங்கு தேச கட்சியின் தாக்குதல் கலாசாரம் பரப்பப்படுகிறது என ஜெகன் மோகன் ரெட்டியின் சமூக ஊடக பதிவு தெரிவிக்கின்றது.

கடப்பா,

ஆந்திர பிரதேசத்தில் வேம்பள்ளி பகுதியில் அஜய் குமார் ரெட்டி என்பவர் மீது தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அஜய், சிகிச்சைக்காக ரிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அஜய் வாக்களித்து இருக்கிறார்.

இதனால், அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் அஜய்யை, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் ஊடகத்திடம் பேசும்போது, வன்முறை மற்றும் அச்சம் ஆகியவற்றின் கலாசாரம் சந்திரபாபு நாயுடுவால் ஊக்குவிக்கப்படுகிறது. ஆந்திராவில் இதுபோன்ற விசயங்களை இதுவரை கேள்விப்பட்டதேயில்லை என குற்றச்சாட்டாக கூறினார்.

கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால், அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார்.

இதுபற்றி அக்கட்சியின் எக்ஸ் சமூக ஊடகத்தில் ஜெகன் கூறிய விசயங்கள் என வெளியிடப்பட்ட செய்தியில், வேம்பள்ளி மற்றும் புலிவெந்துலா பகுதியில் இதுபோன்ற தாக்குதல் கலாசாரம் இதற்கு முன் நடந்ததே இல்லை. ஆந்திரா முழுவதும் தெலுங்கு தேச கட்சியின் தாக்குதல் கலாசாரம் பரப்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தெலுங்கு தேச அரசு, மாணவர்களுக்கு பள்ளிக்கூட பைகள் வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது என குற்றச்சாட்டாக கூறிய ஜெகன், அவர்களின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என கேட்டு கொண்டதுடன், அடுத்த தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்திக்க வைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில், 16 இடங்களை தெலுங்கு தேச கட்சி கைப்பற்றியது. எனினும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலேயே வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்