மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்; 2 பேர் கைது
|மங்களூரு அருகே மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள பணம்பூர் கடற்கரைக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேரும், மாணவிகள் 2 பேரும் வந்தனர். அவர்கள் கடற்கரையில் பேசி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் கல்லூரி மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் கல்லூரி மாணவிகள் அங்கிருந்து சென்றனர். இந்தநிலையில், கல்லூரி மாணவர்கள் 4 பேரையும் அவர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அவர்கள் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் உருவா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதேப்பகுதியை சேர்ந்த லாயிட்பிண்டோ மற்றும் தீக்ஷித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.