உ.பி.யில் கொடூரம்: பலாத்காரம், வீடியோ, 2 சிறுமிகள் மரணம்... சில நாளில் தந்தை மர்ம மரணம்
|செங்கல் சூளையில் வேலை செய்து வந்த 2 சிறுமிகளை, கட்டாயப்படுத்தி மதுபானம் கொடுத்து, மயக்கி, பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்த கொடூரம் நடந்துள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் கான்பூர் மாவட்டத்தில் தொழிலதிபர் நடத்தும் செங்கல் சூளை ஒன்றில் 2 சிறுமிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உள்பட பலர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் 2 சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கு போட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
இதுபற்றி நடந்த போலீசாரின் விசாரணையில், தொழிலதிபரின் 18 வயது மகன் மற்றும் அவருடைய 19 வயது மருமகன் இருவரும் சேர்ந்து டீன்-ஏஜ் சிறுமிகளுக்கு கட்டாயப்படுத்தி மதுபானம் கொடுத்து, மயக்கி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதன்பின்னர், அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
இதுபற்றி சிறுமிகளின் குடும்பத்தினர் கூறும்போது, சம்பவத்தன்று, சிறுமிகள் இருவரும் மாலையில் வயல்வெளிக்கு சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் திரும்பி வராத நிலையில், உறவினர்கள் வெளியே சென்று தேடியுள்ளனர். இதில், அருகேயுள்ள பிளம் பழமரம் ஒன்றில் இருவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன என தெரிவித்தனர்.
அந்த சிறுமிகளை மிரட்டுவதற்கு பயன்படுத்துவதற்காக, அவர்கள் வீடியோ எடுத்து வைத்தனர். இதனால் சிறுமிகள் இருவரும் வேதனையில், தற்கொலை செய்து கொள்வது என முடிவெடுத்துள்ளனர். அவர்களை பலாத்காரம் செய்ததுடன், தற்கொலை செய்ய தூண்டியும் உள்ளனர் என குற்றச்சாட்டாக தெரிவித்தனர்.
இந்த வழக்கில் தொழிலதிபர் மற்றும் இளைஞர்கள் 2 பேர் என 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களின் மொபைல் போன்களில் இருந்து, வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை போலீசார் கைப்பற்றினர். அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், 2 சிறுமிகளில் ஒருவரின் தந்தை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி மூத்த காவல் அதிகாரி தீக்சா சர்மா செய்தியாளர்களிடம் கூறும்போது, அவரின் உடல் நேற்று மதியம் மீட்கப்பட்டது.
அவருடைய வீட்டில் இருந்து 2 கி.மீ.க்கு குறைவான தொலைவில் ஹமியுர்பூர் பகுதியருகே அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. வழக்கம்போல் நடைபெறும் பிரேத பரிசோதனைக்கு பின்னர், குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் முன்னிலையில் கிராமத்தில் இறுதி சடங்குகள் நடந்தன என கூறினார். எனினும், அவருடைய மகன் போலீசில் புகார் அளித்து உள்ளார். இதுபற்றியும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கான்பூரில், செங்கல் சூளையில் வேலை செய்து வந்த சிறுமிகளை, கட்டாயப்படுத்தி மதுபானம் கொடுத்து, மயக்கி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்த சம்பவத்தில் சிறுமிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், ஒரு வாரத்திற்குள் அவர்களில் ஒருவரின் தந்தையின் உடலை தூக்கு போட்ட நிலையில் போலீசார் மீட்டது மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் உண்மையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரும் அடித்து, தாக்கி தூக்கில் தொங்க விட்டனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.