அசாமில் கொடூரம்; கணவன், மாமியாரை கொன்று துண்டுகளாக்கி பிரிட்ஜில் மறைத்து வைத்த மனைவி
|அசாமில் சொத்து தகராறில் கணவன், மாமியாரை கொன்று உடல்களை துண்டுகளாக்கிய மனைவி பிரிட்ஜில் மறைத்து வைத்த கொடூர சம்பவம் தெரிய வந்து உள்ளது.
கவுகாத்தி,
அசாமில் கவுகாத்தி நகரில் பாரத ஸ்டேட் வங்கி அருகே நரேங்கி பகுதியில் வசித்து வந்தவர் அமர்ஜோதி டே. இவரது தாயார் சங்கரி டே. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தனா கலீடா என்ற பெண்ணுடன் அமர்ஜோதிக்கு திருமணம் நடந்தது.
நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன் தனது கணவர் அமர்ஜோதி மற்றும் மாமியார் சங்கரி ஆகியோரை காணவில்லை என நூன்மதி காவல் நிலையத்தில் வந்தனா புகார் அளித்து உள்ளார்.
புகாரை பெற்று கொண்ட போலீசார், காணாமல் போனவர்கள் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, வந்தனா மற்றொரு புகார் அளித்து உள்ளார்.
அதில், தனது மாமியாரின் 5 வங்கி கணக்கில் இருந்து அமர்ஜோதியின் தாய்மாமன் பணம் சுருட்டி கொண்டு ஓடி விட்டார் என தெரிவித்து உள்ளார். போலீசாரின் விசாரணையில், ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கு ஒன்றில் இருந்து வந்தனா ரூ.5 லட்சம் பணம் எடுத்தது தெரிய வந்தது.
இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் சில நாட்களுக்கு முன் வந்தனாவை கைது செய்து விசாரித்து உள்ளனர். அதில், கணவர், மாமியாரை கொலை செய்த விவரங்களை அவர் ஒப்பு கொண்டு உள்ளார்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, திருமணத்திற்கு பின்னர், கணவருடன் சுமுக முறையில் வந்தனாவின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஆனால், தன்ஜீத் தேகா என்ற நபருடன் வந்தனாவுக்கு தொடர்பு ஏற்பட்டு உள்ளது.
அது நாளடைவில் தகாத உறவாக மாறியதில், கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. அமர்ஜோதியின் தாயாருக்கு கவுகாத்தி நகரில் சந்த்மாரி பகுதியில் 5 கட்டிடங்கள் உள்ளன.
அவற்றில் ஒன்றில் வந்தனாவின் மாமியார் வசித்ததுடன், 4 கட்டிடங்களை வாடகைக்கு விட்டு உள்ளார். அவற்றின் வாடகை வசூலை அமர்ஜோதியின் தாய்மாமன் கவனித்து வந்து உள்ளார்.
இதில், அதிருப்தி அடைந்த வந்தனா, கணவருடன் சண்டை போட்டு உள்ளார். வந்தனாவை அமர்ஜோதி விவாகரத்து செய்ய தயாராவதற்கு இதுவும் காரணங்களில் ஒன்றாக அமைந்து விட்டது.
இந்நிலையில், வந்தனா முதலில் அரூப் தாஸ் என்பவர் உதவியுடன் மாமியாரை கொலை செய்து உள்ளார். உடல் பாகங்களை 3 நாட்களாக பிரிட்ஜில் வைத்து உள்ளார். அதன்பின் கள்ளக்காதலனான தன்ஜீத் உதவியுடன் நரேங்கி பகுதியிலுள்ள தனது வீட்டில் வைத்து வந்தனா, அமர்ஜோதியை கழுத்து இறுக்கி, கொடூர முறையில் கொலை செய்து உள்ளார்.
இருவரின் உடல் பாகங்களையும் துண்டுகளாக்கி பாலித்தீன் பைகளில் போட்டு உள்ளனர். அதன்பின் தன்ஜீத் காரில் வைத்து அவற்றை மேகாலயா அருகே தவுகி பகுதியில் சாலையோரம் உள்ள 60 அடி பள்ளத்தில் வீசி சென்று உள்ளனர்.
வந்தனா அளித்த தகவலின் அடிப்படையில், தன்ஜீத் தேகா மற்றும் அரூப் தாஸ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூன்று பேரையும் அழைத்து கொண்டு நேற்று போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று உடல் பாகங்களை மீட்டனர்.
இந்த கொலை சம்பவத்தில் பெரிய கும்பல் ஈடுபட்டு இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். விவாகரத்து மற்றும் சொத்து தகராறில் இந்த கொலை நடந்து உள்ளது என போலீசார் கூறியுள்ளனர்.
டெல்லியில் காதலன் அப்தாப் என்பவரால், ஷ்ரத்தா வாக்கர் என்பவர் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக சாலையில் வீசப்பட்ட பரபரப்பு சம்பவம் போல், இந்த விவகாரத்தில் மனைவி செயல்பட்டு, கணவர், மாமியாரை கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.