வேலை தருகிறோம் என கூறி கொடூரம்: 6 மாத இந்து கர்ப்பிணி பலாத்காரம்; நியாயப்படுத்திய 4 பேர் கைது
|மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வேலை தருகிறோம் என அழைத்து 6 மாத இந்து கர்ப்பிணியை பலாத்காரம் செய்து, அதனை நியாயப்படுத்திய அவலம் நடந்துள்ளது.
இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் இளம்பெண் ஒருவர் வேலை தேடி அலைந்துள்ளார். கொரோனா காலத்தில் வேலையின்றி தவித்த அவரை, கடந்த மே மாதத்தில் இன்ஸ்டாகிராம் வழியே ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.
வேலை தேடிய அந்த பெண் சமூக ஊடகம் வழியே தனது கல்வி, படிப்பு உள்ளிட்ட தன்விவர குறிப்புகளை பதிவிட்டு உள்ளார். அர்பாஸ் என்ற அந்த நபர் அதனை பார்த்து, அந்த பெண்ணை அணுகியுள்ளார். வேலை உத்தரவாதம் அளித்து உள்ளார். பின் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். சமூக ஊடகம் வழியே சாட்டிங் செய்துள்ளனர்.
இதுவரை நட்பு நன்றாக சென்ற நிலையில், நண்பரின் மற்றொரு முகம் வெளிப்பட தொடங்கியது. தனது நண்பர்களான பிரின்ஸ் சையது மற்றும் அப்சல் இருவரும் வேலை ஆலோசகர்களாக உள்ளனர். அவரை அறிமுகம் செய்து வைக்கிறேன். அவர்கள் வேலை வாங்கி தருவார்கள் என கூறியுள்ளார்.
இதற்காக இந்தூரில் உள்ள கணேஷ் நகரில் வசித்து வந்த அந்த பெண்ணை, பன்வார்குவா பகுதிக்கு வரவழைத்து உள்ளனர். அதில், அப்சலும் இருந்துள்ளார். வேலை வாங்கி தரப்படும் என கூறி, இளம்பெண்ணின் தொலைபேசி எண்ணை அப்சல் வாங்கி கொண்டுள்ளார். அந்த இளம்பெண் வீட்டுக்கு திரும்பியதும், உன்னை விரும்புகிறேன் என அப்சல் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.
தொடர்ந்து, அர்பாஸ் அந்த இளம்பெண்ணிடம், எனது தோழியாகி விடு. எனது தேவைகளை பூர்த்தி செய். நான் உன்னை திருப்திப்படுத்துவேன் என குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். உனக்கு வேலை வாங்கி தருவேன். உனது சம்பளம் போக கூடுதல் வருவாய்க்கு வழி செய்கிறேன் என்றும் தெரிவித்து உள்ளார்.
இந்த செய்தியை படித்ததும், இருவரிடம் இருந்தும் அந்த பெண் விலகியிருக்கிறார்.
இதன்பின்பு ஒரு மாதம் சென்றதும், ஆகஸ்டில் பிரின்ஸ் சையது குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், வேலை ஒன்று இருக்கிறது. நல்ல சம்பளம் கிடைக்கும். இதற்காக ரொம்ப தூரம் செல்ல வேண்டாம். உங்களது வீட்டுக்கு பக்கத்திலேயே அலுவலகம் உள்ளது என தெரிவித்து உள்ளார்.
இதன்படி, கடந்த செப்டம்பர் 14-ந்தேதி, ரீகல் சதுக்கம் பகுதிக்கு வரும்படி பிரின்ஸ் கூறியுள்ளார். அந்த இளம்பெண் சென்றதும், கார் ஒன்று வந்து நின்றது. அதில் அமரும்படி கூறியுள்ளார். அந்த காரில் அப்சல், அர்பாஸ் மற்றும் சையது என்ற ஓட்டுனரும் முன்பே இருந்துள்ளனர். இதன்பின்பு, சமோசாவும், குடிக்க தண்ணீரும் கொடுத்துள்ளனர்.
இதுபற்றி போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர். பதிவில், சமோசாவை சாப்பிட்டதும் அந்த பெண் சோர்வடைந்து உள்ளார். மயக்கமும் அடைந்து உள்ளார். இதன்பின், காரில் விஜயநகர் காலனிக்கு உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்பு, பாலியல் உறவு வைத்து கொள்ளும்படி பிரின்ஸ் மற்றும் அப்சல் வலியுறுத்தி உள்ளனர்.
அதற்கு மறுத்த அந்த பெண், தன்னை விட்டு விடும்படி கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவேயில்லை. ஒரு இந்து பெண்ணுடன் உறவு வைப்பது தங்களை சொர்க்கத்துக்கு அழைத்து செல்லும் என பேசியுள்ளனர். 6 மாத கர்ப்பிணி என தன்னை பற்றி அந்த பெண் கூறியபோதும், இஸ்லாமில் அனைத்தும் ஏற்புடையது என பதில் வந்துள்ளது.
இதன்பின்பு அரை மயக்கத்திலேயே அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றி வெளியே கூறினால் உன்னையும், கணவரையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுமுள்ளனர். பின்பு தப்பி சென்றுள்ளனர். வீடு திரும்பிய அந்த பெண் கணவரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். அவர் தைரியப்படுத்தி, துகோகஞ்ச் போலீசாரிடம் சமீபத்தில் புகார் அளித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, அப்சல் பட்டேல், அர்பாஸ் கான், பிரின்ஸ் சையது மற்றும் சையது என 4 பேரையும் அந்த பெண் புகாரில் தெரிவித்து உள்ளார். இதுபற்றி விசாரணை நடத்தி 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பின்பு விரிவான விசாரணை நடந்து வருகிறது.