சிவமொக்காவில் திருடிய பொக்லைன் எந்திரத்தால் ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி
|சிவமொக்காவில் திருடிய பொக்லைன் எந்திரத்தால், ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர் ரோந்து போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார்.
சிவமொக்கா-
சிவமொக்காவில் திருடிய பொக்லைன் எந்திரத்தால், ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர் ரோந்து போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.7½ லட்சம் தப்பியது.
ஏ.டி.எம். மையம் உடைப்பு
சிவமொக்கா டவுன் வினோபாநகரில் உள்ள சிவன் கோவில் பகுதியில் ஆக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் வினோபா நகர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு நபர், பொக்லைன் எந்திரம் மூலம், அந்த ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபரை பிடிக்க முயன்றனர். உடனே மர்மநபர், பொக்லைன் எந்திரத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி செல்ல முயற்சி
பொக்லைன் கொண்டு இடிக்கப்பட்டதில் ஏ.டி.எம். மையத்தின் கதவு, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி கிடந்தன. மேலும் ஏ.டி.எம். எந்திரத்தின் மேல் பகுதியும் சேதப்படுத்தப்பட்டு இருந்ததுடன், ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுக்க பொக்லைன் மூலம் முயற்சி நடந்ததும் தெரியவந்தது.
இதனால் மர்மநபர் பொக்லைன் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்து பணத்துடன் தூக்கிச் செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது. ஆனால் அவர் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி செல்வதற்கு முன்பு ரோந்து போலீசார் அங்கு வந்ததால், இந்த கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
திருட்டு பொக்லைன் எந்திரம்
விசாரணையில், ஏ.டி.எம். மையம் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பொக்லைன் எந்திரம் 3 நாட்களாக நின்றிருந்ததும், அந்த பொக்லைன் எந்திரத்தை கள்ளச்சாவி போட்டு மர்மநபர் திருடியதும் தெரியவந்தது. மேலும் அந்த திருட்டு பொக்லைன் மூலம் ஏ.டி.எம். மையத்தை உடைத்ததும், ஏ.டி.எம். எந்திரத்தையே கொள்ளையடித்து செல்லவும் மர்மநபர் திட்டமிட்டதும், அந்த ஏ.டி.எம். மையத்திற்கு காவலாளி நியமிக்கப்படவில்லை என்பதும், இதையெல்லாம் நோட்டமிட்டு மர்மநபர் இந்த துணிகர கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
ரூ.7½ லட்சம் தப்பியது
இதற்கிடையே வங்கி அதிகாரிகளும் அங்கு வந்து ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டனர். கொள்ளை முயற்சி நடந்த மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.7½ லட்சம் இருந்தது தெரியவந்தது. ஆனால் ரோந்து போலீசாரை பார்த்தும், கொள்ளையன் தப்பி ஓடியதால் அந்த பணம் தப்பியதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வினோபா நகர் போலீசாா் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். அத்துடன் தப்பி ஓடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பரபரப்பு
திருடிய பொக்லைன் மூலம் ஏ.டி.எம். மையத்தை உடைத்து, ஏ.டி.எம். எந்திரத்தை பணத்துடன் மர்மநபர் தூக்கிச் சென்று கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் சிவமொக்காவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.