கர்நாடக மாநிலம் காங்கிரசுக்கு ஏ.டி.எம். போன்றது என பா.ஜ.க. குற்றச்சாட்டு; கார்கே பதில்
|கர்நாடகா மாநிலம் காங்கிரஸ் அரசுக்கு ஏ.டி.எம். போன்றது என்ற பா.ஜ.க. குற்றச்சாட்டுக்கு கார்கே பதிலளித்து உள்ளார்.
கலபுரகி,
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜு கார்கே கலபுரகியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
அவரிடம், கர்நாடகா மாநிலம் காங்கிரஸ் அரசுக்கு ஏ.டி.எம். போன்றது என்ற பா.ஜ.க.வின் குற்றச்சாட்டை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கார்கே, முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி இதற்கு முன்பே பதிலளித்து விட்டனர்.
அரசு அமைந்து ஒரு சில மாதங்களே ஆகியுள்ளன. இந்த விசயங்களை அவர்கள் முன்பே கூறி விட்டனர். நீங்கள் சிந்தித்து, பின்னர் பேச வேண்டும். தேர்தலை முன்னிட்டு அவர்கள் அரசுக்கு அவதூறு ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அது வேலைக்கு ஆகாது என்று கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணியில் தொகுதி பகிர்வு பற்றி கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அவர், அதனை நாங்கள் கவனத்தில் கொள்வோம். முதலில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்து முடியட்டும் என்று கூறினார்.