< Back
தேசிய செய்திகள்
உ.பி.யில் சட்டம்-ஒழுங்கு ஒட்டுமொத்தமாக சீர்குலைந்துவிட்டது - மம்தா பானர்ஜி
தேசிய செய்திகள்

உ.பி.யில் சட்டம்-ஒழுங்கு ஒட்டுமொத்தமாக சீர்குலைந்துவிட்டது - மம்தா பானர்ஜி

தினத்தந்தி
|
16 April 2023 9:39 AM GMT

உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு ஒட்டுமொத்தமாக சீர்குலைந்துவிட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.பி. ஆதிக் அகமது. ரவுடியாக வாழ்க்கையை தொடங்கிய ஆதிக் அகமது பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார்.

இதனிடையே, கொலை உள்பட 100-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகளில் ஆதிக் அகமது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே, 2006-ம் ஆண்டு உமேஷ் பால் என்பவரை கடத்திய வழக்கில் ஆதிக் அகமதுவுக்கு கடந்த மாதம் பிரயாக்ராஜ் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் ஆதிக் அகமது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதேவேளை, ஆதிக் அகமதுவையும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவை நேற்று மாலை பிரயாக்ராஜில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக போலீசார் அழைத்துவந்தனர்.

அப்போது, அங்கு குவிந்த பத்திரிக்கையாளர்கள் குற்றவாளி ஆதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது, பத்திரிக்கையாளர் வேடத்தில் வந்திருந்த 3 பேர் திடீரென ஆதிக் அகமது அவரது சகோதரர் அஷ்ரப் அகமது மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டு பல்வேறு தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தில் ஆதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசையும் மீறி நடந்த இந்த துப்பாக்கிச்சூடு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க உத்தரபிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு ஒட்டுமொத்தமாக சீர்குலைந்துவிட்டதாக மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், இந்த வெக்கக்கேடான அராஜகத்தால் நான் அதிர்ச்சியடைந்தேன். உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு ஒட்டுமொத்தமாக சீர்குலைந்துவிட்டது. போலீசார், பத்திரிக்கையாளர்களை கண்டுகொள்ளாமல் குற்றவாளிகள் இப்போது சட்டத்தை கையில் எடுப்பது வெட்கக்கேடாது. இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இடமில்லை' என்றார்.

மேலும் செய்திகள்