உன்சூரில் மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; முதியவர் சாவு
|உன்சூரில் மோட்டார் சைக்கிள்- கார் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
மைசூரு-
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை டவுன் பகுதியை சேர்ந்தவர் புட்டசுவாமி (வயது65). இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் புட்டசுவாமி உன்சூருக்கு சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து ரங்கனதிட்டு கிராமத்தில் உள்ள தனது தம்பியின் மகள் வீட்டிற்கு புட்டசுவாமி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட புட்டசுவாமி படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், நேற்று காலை புட்டசுவாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உன்சூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.