மருந்து கடையில் மின்கசிவால் தீவிபத்து; பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்
|கொப்பா அருகே, மருந்து கடையில் மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
சிக்கமகளூரு;
மருந்து கடை
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா உலிமக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் சொந்தமாக அதே பகுதியில் மருத்துகடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கார்த்திக் இரவு விற்பனையை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது திடீரென அவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் உடனே கடையின் உரிமையாளர் கார்த்திற்கு தகவல் கொடுத்தனர். இதைக்கேட்டு பதற்றம் அடைந்த கார்த்திக் உடனடியாக கடைக்கு விரைந்து வந்து ஷெட்டரை திறந்துள்ளார். அப்போது கடையில் பொருட்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தது. உடனே அவர் தீயணைப்பு படையினருக்கும், கொப்பா டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
தண்ணீரை பீய்ச்சி அடித்து...
மேலும் அங்கிருந்தவர்கள் வாளியில் தண்ணீரை பிடித்து ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். அதற்குள் தீ மளமளவென எரிய தொடங்கியது. ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. அதற்குள் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து பல மணி நேரம் போராட்டத்திற்கு தீயை கட்டுக்குள் கொண்டுவந்து முற்றிலும் அணைத்தனர். மேலும் தகவல் அறிந்த கொப்பா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பல லட்சம் ரூபாய்...
இதில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் தீயணைப்பு படையினர் தீயை, அருகில் இருந்த கடைகளுக்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து கடைக்குள் சென்று பார்வையிட்டனர்.
இதில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.