< Back
தேசிய செய்திகள்
சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில்  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து   நாளை மறுநாள் இறுதி முடிவு
தேசிய செய்திகள்

சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து நாளை மறுநாள் இறுதி முடிவு

தினத்தந்தி
|
28 Aug 2022 3:40 AM IST

சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து நாளை மறுநாள்(30-ந் தேதி) இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து நாளை மறுநாள்(30-ந் தேதி) இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.

கர்நாடக ஐகோர்ட்டு அனுமதி

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் வருவாய்த்துறைக்கு சொந்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து வக்பு வாரியம் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்குவது குறித்து அரசே முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆலோசனை

இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பின்படி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து நேற்று காலையில் பெங்களூருவில் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவடகி, போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, வருவாய்த்துறை அதிகாரிகளுடன், மந்திரி அசோக் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் முடிந்ததும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள், சாம்ராஜ் பேட்டை நகரவாசிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட பிற அமைப்புகளுடனும் மந்திரி அசோக் ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு, சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்திற்கு சென்ற மந்திரி அசோக், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் கேட்டு அறிந்து கொண்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

நாளை மறுநாள் முடிவு

சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கர்நாடக ஐகோர்ட்டு அனுமதி வழங்கி இருக்கிறது. ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து வருகிற 29-ந் தேதி (நாளை) வக்பு வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். அவ்வாறு வழக்கு தொடர்ந்தால், கோர்ட்டு என்ன உத்தரவு பிறப்பிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே கோர்ட்டு உத்தரவை பொறுத்து ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்க அரசு தீர்மானித்துள்ளது.

எனவே வருகிற 30-ந் தேதி (நாளை மறுநாள்) ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்.

எந்த பிரச்சினையும் இன்றி...

அதுபோல், ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தேவையான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அரசுக்கு எந்த விதமான கெட்ட பெயரும் ஏற்படாத வண்ணம் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட பாதுகாப்பு வழங்குவதாக போலீஸ் டி.ஜி.பி.யும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்