பிதரகெரே கிராமத்தில் தோட்டத்திற்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசம்
|கலசா அருகே பிதரகெரே கிராமத்தில் தோட்டத்திற்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசம் செய்தது. இதில் வாழை, தென்னை மரங்கள் நாசமானது.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா ஜாம்பலி அருகே உள்ள பிதரகெரே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அந்த வனப்பகுதியில் இருந்து இரைதேடி காட்டுயானை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் கிராமத்திற்குள்ளும், விவசாய தோட்டங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வருவதுதொடர் கதையாக நடந்து வருகிறது.
இ்ந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டுயானைகள் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. பின்னர் அங்கிருந்த வாழை, தென்னை, பாக்கு போன்றவைகளை தும்பிக்ைகயால் முறித்தும், காலால் மிதித்தும் நாசப்படுத்தியது.
அப்போது தோட்டத்திற்கு வந்த சுரேஷ், காட்டுயானைகள் அட்டகாசம் செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓடினாா். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின்பேரில் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர்.
ஆனால் அதற்குள் காட்டுயானைகள் அங்கிருந்த சென்று விட்டது. இதையடுத்து சுரேஷ், வனத்துறை அதிகாரிகளிடம் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், காட்டுயானைகள் நாசப்படுத்திய பயிா்களுக்கு நஷ்டஈடு வழங்க கோரியும் கோரிக்கை வைத்தாா். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.