< Back
தேசிய செய்திகள்
மங்களூரு விமான நிலையத்தில் ரூ.5¾ லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது; கேரளாவை சேர்ந்தவர் கைது
தேசிய செய்திகள்

மங்களூரு விமான நிலையத்தில் ரூ.5¾ லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது; கேரளாவை சேர்ந்தவர் கைது

தினத்தந்தி
|
2 Sept 2022 8:56 PM IST

மங்களூரு விமான நிலையத்தில் ரூ.5¾ லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மங்களூரு;


துபாய் விமானம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து டெல்லி, மும்பை போன்ற பகுதிகளுக்கும், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனை பயன்படுத்தி சிலர் போதைப்பொருட்கள், தங்கம் போன்றவற்றை கடத்தி வருவதும், அதை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் துபாய்க்கு விமான மூலம் வெளிநாட்டு பணம் கடத்தப்பட உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாய் செல்ல விமானத்திற்கு காத்திருந்த வாலிபரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

வெளிநாட்டு பணம்

இதையடுத்து அந்த வாலிபரை அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது உடைமைகளுக்குள் வெளிநாட்டு பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்தவர் என்பதும், ரூ.5¾ லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை துபாய்க்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.5¾ லட்சம் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த வாலிபரை பஜ்பே போலீசில், அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்