< Back
தேசிய செய்திகள்
மல்பே கடற்கரையில் வெவ்வேறு இடங்களில் கடல் அலையில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 5 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

மல்பே கடற்கரையில் வெவ்வேறு இடங்களில் கடல் அலையில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 5 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
6 Oct 2022 12:15 AM IST

மல்பே கடற்கரையில் வெவ்வேறு இடங்களில் கடல் அலையில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 5 பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார்.

மங்களூரு;


மல்பே கடற்கரை

உடுப்பி மாவட்டம் மல்பேயில் கடற்கரை உள்ளது. சுற்றுலா தலமாக விளங்கும் மல்பேக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மல்பே கடற்கரையில் குவிந்திருந்தனர். அவர்கள் அரபிக்கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் மல்பே கடற்கரையில் வெவ்வேறு இடங்களில் கடல் அலையில் சிக்கிய 5 பேர் மீட்கப்பட்டனர். மேலும் ஒருவர் உயிரிழந்தார். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

ஒருவர் சாவு

பெங்களூருவை சேர்ந்த சலாம் செர்ரி, மைசூருவை சேர்ந்த அப்ரார் ஆகிய 2 பேரும் அரபிக்கடலில் குளித்து கொண்டிருந்தபோது, ராட்சத அலையில் சிக்கி உள்ளே இழுத்து செல்லப்பட்டனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கடலோர காவல்படையினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு மணிப்பால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் அப்ரார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சலாம் செர்ரியின் உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதேபோல், மற்றொரு இடத்தில் தமிழ்நாடு சேலத்தை சேர்ந்த செந்தில், விஜயாப்புராவை சேர்ந்த பசராஜூ, நமாஸ், பெங்களூருவை சேர்ந்த சோகம் கோஷ் ஆகிய 4 பேரும் கடலில் குளித்து கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி கொண்டனர். அவர்கள் 4 பேரையும் கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்கொலை முயற்சி

மேலும் மற்றொரு இடத்தில் மைசூருவை சேர்ந்த தோஷிப் என்பவர், கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அதனை அறிந்த கடலோர காவல் படையினர் அவரை பத்திரமாக மீட்டனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவங்கள் குறித்து மல்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்