நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் உதவியாளர் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் கைது
|நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் உதவியாளரை மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் மும்பை குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் காயமடைந்தனர். இதில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் பாகிஸ்தான் நாட்டுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு கடத்தும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது. தேடப்படும் பட்டியலிலும் அவர் வைக்கப்பட்டு உள்ளார்.
இவரது உதவியாளர் ரியாஸ் பாட்டி. தாவூத்தின் உதவியாளரான மற்றொரு தாதா சோட்டா ஷகீல் என்பவரின் உறவினர் சலீம் குரேஷி என்ற சலீம் புரூட். சலீமுடன் சேர்ந்து ரியாஸ், மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவரை கொலை செய்து விடுவோம் என மிரட்டி விலை மதிப்புள்ள வாகனம் ஒன்றையும் மற்றும் ரூ.7 லட்சத்திற்கும் கூடுதலான தொகையையும் மிரட்டி வாங்கியுள்ளனர்.
இதுபற்றி வெர்சோவா காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவானது. இதன் அடிப்படையில், மும்பை குற்ற பிரிவின் மிரட்டி பணம் பறித்தல் ஒழிப்பு போலீசார் விசாரணையை தொடங்கினர். சலீம் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இதில், ரியாசை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இந்த மிரட்டல் மற்றும் பணம் பறித்தல் வழக்கில், கைது செய்யப்பட்ட ரியாஸ் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரை விசாரணை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மும்பையில் உள்ள கோரேகாவன் காவல் நிலையத்திலும் ரியாசுக்கு எதிராக மிரட்டல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.