சொத்துக்குவிப்பு வழக்கு: மறு விசாரணைக்கு தடை கோரி தமிழக அமைச்சர்கள் மனு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
|சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு தடை கோரி தமிழக அமைச்சர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுடெல்லி,
தமிழ்நாடு நிதி அமைச்சர்களாக உள்ள தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டு அமைச்சர்களாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டு, அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து, தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், அமைச்சர்கள் இருவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், அவருடைய மனைவி ஆர்.ஆதிலட்சுமி, அமைச்சர் தங்கம் தென்னரசு, அவருடைய மனைவி டி.மணிமேகலை ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.