சொத்து தகராறில் மகளுடன் தம்பதி தற்கொலை
|சாம்ராஜ்நகரில் சொத்து தகராறில் மகளுடன் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சோகம் சம்பவம் நடந்துள்ளது.
கொள்ளேகால்:
சாம்ராஜ்நகரில் சொத்து தகராறில் மகளுடன் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சோகம் சம்பவம் நடந்துள்ளது.
3 பேர் தற்கொலை
சாம்ராஜ்நகர் தாலுகா பேடரபுரா கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவசாமி (வயது 42). இவரது மனைவி சவிதா (33). டெய்லர் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் தாத்தாவின் வீட்டில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வருகிறாள். 2-வது மகள் சிஞ்சனா (வயது 15), பெற்றோருடன் வசித்து வந்தாள். இவள் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக மகாதேவசாமிக்கும், அவரது சகோதரிக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வெகுநேரமாகியும் மகாதேவசாமி மற்றும் அவரது மனைவி வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை தட்டி திறக்கும்படி கூறினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு மகாதேவசாமி மற்றும் அவரது மனைவி சவிதா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர். கீழே சிஞ்சனா இறந்து கிடந்தார்.
சொத்து தகராறு
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனே இது குறித்து சாம்ராஜ்நகர் புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 3 பேரின் உடலகளையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதும், மகள் சிஞ்சனா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையில் சம்பவ இடத்தில் போலீசார் சோதனை செய்தபோது, ஒரு உருக்கமான கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில் எங்கள் தற்கொலைக்கு எனது சகோதரியும், மாமாவுதான் காரணம். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களுக்கு எந்த சொத்தும் கிடைக்க கூடாது என்று எழுதி வைத்திருந்தனர். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.