தன்னை புறக்கணிக்கும் விவகாரத்தை உரிமை குழுவுக்கு அனுப்ப வேண்டும்; சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் வலியுறுத்தல்
|சிருங்கேரி தொகுதியில் தன்னை புறக்கணிக்கும் விவகாரத்தை உரிிமை குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ராஜூகவுடா வலியுறுத்தினார்.
பெங்களூரு:
சிருங்கேரி தொகுதியில் தன்னை புறக்கணிக்கும் விவகாரத்தை உரிிமை குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ராஜூகவுடா வலியுறுத்தினார்.
சாகும்வரை உண்ணாவிரதம்
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 7-வது நாள் கூட்டம் பெலகாவி சுவர்ண விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பூஜ்ஜிய நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ராஜூகவுடா பேசுகையில், "நான் சிருங்கேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளேன். எனது தொகுதியில் நடைபெறும் அரசு திட்ட பணிகள் தொடக்க விழாவில் எனக்கு அழைப்பு விடுப்பது இல்லை. அதற்கு பதிலாக எனக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவரை அழைத்து திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்கள். இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்யாவிட்டால் நான் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன். சபாநாயகர் உடனே இந்த விவகாரத்தை உரிமை குழுவுக்கு அனுப்பி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
சபாநாயகரின் கடமை
அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வை நிராகரித்துவிட்டு தோல்வி அடைந்தவருக்கு அரசு நிதியை ஒதுக்கி வளர்ச்சி திட்ட பணிகளை அவரால் தொடங்கி வைப்பது ஜனநாயக விரோத செயல். எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை நிராகரிப்பது என்பது அவரது உரிமையை மீறும் செயல் ஆகும். இதுபோல் இதற்கு முன்பு யார் செய்திருந்தாலும் அது தவறு. அதை காரணமாக வைத்து நீங்கள் (அரசு) இவ்வாறு செய்வதும் தவறு. கர்நாடக அரசு கொண்டு வரும் பட்ஜெட்டுக்கு அனுமதி அளிப்பது எம்.எல்.ஏ.க்கள். பட்ஜெட்டுக்கு தேர்தலில் தோல்வி அடைந்தவர் இங்கு வந்து அனுமதி அளிக்கிறாரா?. இந்த சபையின் உறுப்பினரின் உரிமைகளை பாதுகாப்பது சபாநாயகரின் கடமை" என்றார்.
அதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் யு.டி.காதர், சிவலிங்கேகவுடா உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களும் பேசி, தங்கள் தொகுதிகளிலும் இதே நிலையை ஏற்படுத்துவதாக புகார் கூறினர். அதைத்தொடா்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ரமேஷ்குமார், "ஆட்சியில் யார் இருக்கிறார்கள், எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்கள் யார் என்பது முக்கியம் அல்ல. அவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டியது அவசியம். அரசியல் நோக்கத்திற்காக தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது சரியல்ல" என்றார்.
தொகுதி வளர்ச்சி
அதைத்தொடர்ந்து பேசிய சட்டத்துறை மந்திரி மாதுசாமி, "முன்பு எம்.எல்.ஏ.க்கள் எம்.எல்.ஏ.க்களாக பணியாற்றினர். இப்போது எம்.எல்.ஏ.க்கள் என்ஜினீயர்களாக பணியாற்றுகிறார்கள். கெங்கல் ஹனுமந்தய்யா முதல்-மந்திரியாக இருந்தபோது, ரூ.10 லட்சத்திற்கு ஒரு திட்டத்தை அறிவித்தார். அதற்கு சம்பந்தப்பட்ட மந்திரி, தனது அனுமதி இல்லாமல் நீங்கள் எப்படி இந்த திட்டத்தை அறிவிக்கலாம்?" என்று கேட்டார். அந்த காலம் போய்விட்டது. தற்போது எம்.எல்.ஏ.க்களே என்ஜினீயர்களாகவும் பணியாற்றுவதால், திட்டத்திற்கு ஒதுக்கும் நிதி எங்கு போகிறது என்பது எங்களுக்கும், உங்களுக்கும் தெரியும். ராஜூகவுடா தொகுதிக்கு நிதி ஒதுக்கீட்டை குறைக்கவில்லை. எப்படியோ தொகுதி வளர்ச்சிக்கு நிதி வருகிறதே என்று திருப்தி அடைய வேண்டும். எம்.எல்.ஏ.வை எங்கும் புறக்கணிக்கவில்லை. அதனால் இந்த விவகாரம் உரிமை மீறல் பிரச்சினைக்கு வராது" என்றார். மந்திரி மாதுசாமியின் இந்த பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.