ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல்; நாங்கள் ஆட்சியமைப்பது நிச்சயம்: அசோக் கெலாட்
|நடைமுறையில் இருந்து வரும் திட்டங்களை வலுப்பெற செய்து, இந்த முறை வழங்கப்பட்ட உத்தரவாதங்களை நிறைவேற்ற விரும்புகிறோம் என கெலாட் பேசியுள்ளார்.
ஜோத்பூர்,
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற உள்ளது. வாக்களிக்க மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இதனை முன்னிட்டு, ராஜஸ்தானில் ஆளும் காங்கிரசை சேர்ந்த முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசும்போது, இந்த முறை காங்கிரஸ் அரசு மீண்டும் அமையும். இது நிச்சயம். அரசை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது.
நான் மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைக்க விரும்புகிறேன். நாங்கள், மாநிலத்தின் நன்மைக்காகவே நல திட்டங்களை அறிமுகப்படுத்தினோம். அரசு மீண்டும் அமைய பெற்றால்தான் அந்த திட்டங்களை நாங்கள் வலுவாக்க முடியும்.
அவர்கள் (பா.ஜ.க.) ஆட்சிக்கு வந்து விட்டால், அந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டு விடும். நாங்கள், நடைமுறையில் இருந்து வரும் திட்டங்களை வலுப்பெற செய்து, இந்த முறை வழங்கப்பட்ட உத்தரவாதங்களை நிறைவேற்ற விரும்புகிறோம்.
2030-ம் ஆண்டு வரை எங்களுடைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பட்டியல் எங்களிடம் உள்ளது என்று அவர் பேசியுள்ளார்.