< Back
தேசிய செய்திகள்
மேகாலயா, நாகாலாந்தில் இன்று சட்டசபை தேர்தல்: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்

நங்போவில் பெண் தேர்தல் ஊழியர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்றபோது எடுத்த படம்.

தேசிய செய்திகள்

மேகாலயா, நாகாலாந்தில் இன்று சட்டசபை தேர்தல்: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்

தினத்தந்தி
|
27 Feb 2023 5:57 AM IST

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று (திங்கட்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

சில்லாங்,

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேகாலயாவில் 60 தொகுதிகள் இருக்கும் நிலையில், சோகியாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் உள்துறை மந்திரியுமான லிங்டோவின் திடீர் மரணத்தால் அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

ஆளும் தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான கன்ராட் சங்மா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார். கடந்த 5 ஆண்டுகளாக இவரது கூட்டணி அரசில் இடம்பிடித்திருந்த பா.ஜனதா, இந்த தேர்தலில் தனித்தே போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு ஆதரவாக பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இதைப்போல காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகளும், மாநிலத்தை சேர்ந்த சிறிய கட்சிகளும் கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டன.

3,419 வாக்குச்சாவடிகள்

இந்த பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்ந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக 3,419 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணி வரை நடக்கிறது.

இந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்கு 21.4 லட்சம் வாக்காளர்கள் தகுதி வாய்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் அமைதியாக வாக்களிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக 19 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பாதுகாப்பு பணிகளுக்காக மாநில போலீசாருடன் இணைந்து, 119 கம்பெனி மத்திய ஆயுதப்படையினரும் களத்தில் உள்ளனர்.

தேர்தல் அதிகாரி சாவு

இதற்கிடையே மேகாலயாவின் மேற்கு கரோ மலைகள் மாவட்டத்தின் ஜங்ரபாராவில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தேர்தல் பணிக்காக அதிகாரிகள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரத்துடன் சென்று கொண்டிருந்த வாகனம் கவிழ்ந்ததில் தேர்தல் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் நடந்த இந்த விபத்தில் மேலும் சில அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். மற்றொரு வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 60 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை

மாநிலத்தில் இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13.17 லட்சம் ஆகும். இவர்கள் வாக்களிப்பதற்காக ஏராளமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

மாநிலத்தில் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்