மிசோரம், சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு இன்று தேர்தல்: பாதுகாப்பு பணிகள் தீவிரம்
|காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அய்ஸ்வால்,
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதலாவதாக மிசோரமில் இன்று தேர்தல் நடக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் 40 தொகுதிகள் உள்ளன. இந்த 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்களின் இயக்கம், பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 170 பேர் களத்தில் உள்ளனர். இதில் 4 பேர் தலா 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 1,276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. தேர்தலுக்காக மாநிலத்தை சேர்ந்த 3 ஆயிரம் போலீசாருடன், மத்திய ஆயுதப்படைகளை சேர்ந்த 450 குழுக்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
இதைப்போல 90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஷ்காரில் முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. அங்குள்ள 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பேர் பெண்கள் ஆவர்.
இந்த தொகுதிகளில் 40.78 லட்சம் வேட்பாளர்கள் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இவர்கள் வாக்களிப்பதற்காக 5,304 வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டு உள்ளன. அவற்றில் காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேநேரம் பாதுகாப்பு சிக்கல் நிறைந்த 10 தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்துள்ளநிலையில் அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுமார் 60 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதுடன், வெடிகுண்டு நிபுணர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.