மாணவி மீது தாக்குதல்; தனியார் மருத்துவ கல்லூரியை முற்றுகையிட்டு மாணவிகள் போராட்டம்
|சிக்கமகளூருவில் தனியார் மருத்துவ கல்லூரி மாணவியை தாக்கிய கல்லூரியில் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சக மாணவிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்கமகளூரு-
சிக்கமகளூருவில் தனியார் மருத்துவ கல்லூரி மாணவியை தாக்கிய கல்லூரியில் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சக மாணவிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவ கல்லூரி மாணவி மீது தாக்குதல்
சிக்கமகளூரு டவுன் வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவி ஒருவர் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இந்த கல்லூரியில் நடந்த தேர்வின்போது, அந்த மாணவி காப்பி அடித்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த தேர்வு கண்காணிப்பாளர் கல்லூரி முதல்வரான நளினாவிடம் புகார் அளித்தார். இதையடுத்து தேர்வு முடிந்ததும், கல்லூரில் முதல்வர் நளினா, மாணவியை அழைத்து கண்டித்ததுடன் தாக்கியுள்ளார்.
இதில் அந்த மாணவி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இந்த சம்பவத்தால் கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கல்லூரி பேராசிரியர்கள் மயக்கம் தெளிய வைத்து, மாணவியை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு ெசன்ற மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார். அதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து உடனே சிக்கமகளூரு டவுன் போலீசில் புகார் அளித்தனர்.
மாணவிகள் போராட்டம்
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மாணவி தாக்கப்பட்ட சம்பவம் சக மாணவிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவி மீதான தாக்குதலை கண்டித்துள்ள அவர்கள், நேற்று கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது மாணவி மீது தாக்குதல் நடத்திய கல்லூரி முதல்வர் நளினா மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷமிட்டனர்.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதை ஏற்ற மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.