ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
|சிவமொக்கா அருகே ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவமொக்கா-
சிவமொக்கா டவுன் பகுதியை சேர்ந்தவர் பத்ரு (வயது 30). இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில், சம்பவத்தன்று பத்ரு ஆட்டோவில் சவாரிக்காக விநாயகநகர் பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஆட்டோவை முந்தி செல்ல முயன்றனர். அப்போது ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் தனது நண்பர்களிடம் தகவல் தெரிவித்தனர். அவரது நண்பர்கள் 3 பேர், திப்பு நகர் 7-வது கிராஸ் அருகே ஆட்டோ வந்தபோது வழிமறித்தனர். பின்னர் இதுகுறித்து பத்ருவிடம் அவர்கள் கேட்டனர். அப்போது பத்ரு, அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், ஆட்டோ டிரைவரை 3 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் தற்போது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பத்ரு சிவமொக்கா டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் ஆட்டோ டிரைவரை தாக்கியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.