< Back
தேசிய செய்திகள்
சென்னையை சேர்ந்த டாக்டர் மீது பெண்ணின் நண்பர்கள் கொடூர தாக்குதல்
தேசிய செய்திகள்

சென்னையை சேர்ந்த டாக்டர் மீது பெண்ணின் நண்பர்கள் கொடூர தாக்குதல்

தினத்தந்தி
|
14 Sept 2022 10:09 PM IST

காதலியின் நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காதலனான சென்னை டாக்டர் மீது பெண்ணின் நண்பர்கள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதனால் அவர் சுயநினைவை இழந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பெங்களூரு:

காதலியின் நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காதலனான சென்னை டாக்டர் மீது பெண்ணின் நண்பர்கள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதனால் அவர் சுயநினைவை இழந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

நிர்வாண புகைப்படங்கள்

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை சேர்ந்தவர் விகாஷ்(வயது 27). டாக்டரான இவர் பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் பகுதியில் வசித்து வருகிறார். மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலிங் தேர்வுக்கும் விகாஷ் தயாராகி வந்தார். இந்த நிலையில் விகாஷ் பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த இளம்பெண் விகாசுக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வைத்து இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தனது காதலியின் நிர்வாண புகைப்படங்களை விகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக விகாசுக்கும், அவரது காதலிக்கும் இடையே பிரச்சினை உண்டானது. இந்த நிலையில் இதுபற்றி இளம்பெண் தனது நண்பர்களான சுஷில், கவுதம், சூர்யா ஆகியோரிடம் கூறியுள்ளார். இதனால் விகாசிடம் பேச அவரை அழைத்து வரும்படி இளம்பெண்ணிடம் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.

சுயநினைவை இழந்தார்

இதனால் விகாசை இளம்பெண் நியூ மைகோ லே-அவுட்டில் உள்ள சுஷில் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு சுஷில், கவுதம், சூர்யா ஆகிய 3 பேரும் சேர்ந்து விகாசை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. பின்னர் அவரை இளம்பெண்ணும் அவரது நண்பர்களும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனாலும் விகாஷ் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்ற நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி அறிந்த விகாசின் குடும்பத்தினர் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தனர்.

பின்னர் இதுகுறித்து விகாசின் சகோதரர் பேகூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சுஷிலை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கவுதம், சூர்யாவை தேடிவருகின்றனர். மேலும் சுஷிலின் காதலியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்