சட்டவிரோத எலி வளை சுரங்கம் சரிந்தது.. 3 தொழிலாளர்கள் பலி?
|எலி வளை சுரங்கத்தில் சிக்கிய 3 பேரும் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும், அவர்களின் உடல்கள் மீட்கப்படும்வரை உறுதியாக எதையும் தெரிவிக்க இயலாது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திப்ருகர்:
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் பத்காய் மலைப்பகுதியில், பார்கோலாய் மற்றும் நாம்டாங் இடையே சட்டவிரோதமான டிகோக் வெஸ்ட் என்ற சுரங்க பகுதி உள்ளது. இப்பகுதியில் நேற்று இரவு சுரங்க தொழிலாளர்கள் சிலர், சட்டவிரோதமாக எலி வளை சுரங்கத்தில் இருந்து நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவு 12.30 மணியளவில் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் எலி வளை சுரங்கம் சரிந்து, வெளியேறும் பாதை மண்ணால் மூடப்பட்டது. சுரங்கத்தினுள் இருந்த மூன்று தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.
சுரங்கத்தில் சிக்கிய 3 பேரும் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும், அவர்களின் உடல்கள் மீட்கப்படும்வரை உறுதியாக எதையும் தெரிவிக்க இயலாது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"மொத்தம் 4 பேர் எலி வளை சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 பேர் சுரங்கத்தினுள் வேலை செய்தனர். ஒருவர் சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்தபடி, நிலக்கரியை வெளியே கொண்டு வருவதற்கான இழுவை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்க வாயில் மூடியதால் உள்ளே இருந்த 3 பேரும் சிக்கிக்கொண்டனர். சுரங்கத்தில் சிக்கியவர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்த தாவா சேர்பா, மேகாலயாவைச் சேர்ந்த ஜான் மற்றும் பெனால் என அடையாளம் தெரியவந்துள்ளது." என்றும் அந்த அதிகாரி கூறினார்.