சீருடை அணியாமல் வந்ததை கண்டித்ததால் ஆசிரியரை குத்திக்கொன்ற மாணவர் - அசாமில் பயங்கரம்
|பள்ளிக்கு சீருடை அணியாமல் வந்ததை கண்டித்த ஆசிரியரை, மாணவர் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுகாத்தி,
அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் வழக்கம் போல வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. அங்கு 11-ம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் சீருடை அணியாமல் சாதாரண உடையில் பள்ளிக்கு வந்தார். இதைப்பார்த்த வகுப்பாசிரியர் அவரை கண்டித்தார். அத்துடன் வகுப்பில் இருந்து வெளியே செல்லுமாறு பணிவாக கூறினார். ஆனால் மாணவர் அங்கேயே நின்றார். இதனால் கோபமடைந்த ஆசிரியர் சத்தமாக அவரை வெளியேறுமாறு கூறினார்.
இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த மாணவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரின் தலையில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த ஆசிரியர் வகுப்பறையிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப்பார்த்து பிற மாணவர்கள் அலறினர். பின்னர் அந்த ஆசிரியரை சக ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மாணவரை கைது செய்தனர்.