குழந்தை திருமணத்திற்கு எதிராக அசாம் போலீசின் கைது நடவடிக்கை - எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம்
|மாநிலம் முழுவதும் குழந்தை திருமண விவகாரம் தொடர்பாக இதுவரை 2,258 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திஸ்பூர்,
அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக குழந்தை திருமணங்கள் நடைபெறுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை திருமணங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுப்பது, குற்றவாளிகளை கைது செய்வது, விரிவான வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என்று கடந்த 23-ந் தேதி முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையில் கூடிய மாநில மந்திரிசபை முடிவு எடுத்தது.
இதன்படி 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்வோர் மீது போக்சோ சட்டம் பாயும் என்றும், 14-18 வயது சிறுமிகளை திருமணம் செய்கிறவர்கள் மீது குழந்தை திருமண தடை சட்டம், 2016 பாயும் என்றும் முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மா அறிவித்தார்.
மேலும் இந்த திருமணங்கள் செய்வோர் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்களது திருமணங்கள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து மாநிலம் முழுவதும் குழந்தை திருமணம் புரிந்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என இதுவரை 2,258 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 52 பேர் மதகுருமார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துப்ரி, பார்பேட்டா, கோக்ரஜார், விஸ்வநாத் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் துப்ரி மாவட்டத்தின் தமர்ஹட்டில் உள்ள காவல்நிலையத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் முற்றுகையிட்டனர். காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள தங்கள் கணவர், தந்தை உள்ளிட்டவர்களை விடுவிக்கக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர்.
அங்கிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வற்புறுத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.