அசாமில் 'குண்டு' போலீசுக்கு ஆபத்து!
|அசாமில் உடல் எடையைக் குறைக்க முடியாத போலீசார் விருப்ப ஓய்வில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என அசாம் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.
அசாம் மாநில போலீசில் 70 ஆயிரத்து 161 போலீசார் பணிபுரிகின்றனர். இவர்கள் உடல்தகுதியோடு இருக்கிறார்களா என்று அறியும் திட்டம் கடந்த ஆகஸ்டு 16-ந் தேதி தொடங்கியது.
போலீசார் அனைவருக்கும் பி.எம்.ஐ. எனப்படும் உடல் நிறை குறியீட்டெண் சோதனை நடத்தப்பட்டது. அதில், ஆயிரத்து 748 பேர், அதாவது 2.5 சதவீத போலீசார் 'குண்டாக' இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் போலீஸ் பயிற்சி கல்லூரிக்கு திரும்ப பயிற்சி பெற வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் முழுமையான உடல் பரிசோதனை நடத்தப்பட்டு, எதுவும் உடல்நல பிரச்சினை இருக்கிறதா என்று கண்டறியப்படும். அதன் பின் அவர்களுக்கு உரிய சிகிச்சை, ஊட்டச்சத்துகள் வழங்கப்படும். 3 மாதங்களுக்குள் அந்த போலீசார் தங்களின் உடல் நிறை குறியீட்டெண்ணை 30-க்கு கீழே கொண்டுவர வேண்டும். தைராய்டு பிரச்சினை போன்றவை உள்ளவர்கள் தவிர, எடையைக் குறைக்க முடியாத மற்றவர்கள், விருப்ப ஓய்வில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என அசாம் டி.ஜி.பி. ஞானேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.