அசாம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் சுயேச்சை வேட்பாளர் கைது
|பாலியல் வன்கொடுமை வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திஸ்பூர்,
அசாம் மாநிலம் நாகோன் மக்களவை தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் அபு ஷாமா என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இவர் மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், சில மாதங்களுக்கு முன்பு அபு ஷாமாவுக்கு சொந்தமான மருந்துக் கடையில் மருந்து வாங்க சென்றபோது அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த செயலை வீடியோவாக பதிவு செய்து தன்னை மிரட்டி வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அபு ஷாமாவின் மிரட்டலுக்கு பயந்து அவருக்கு ஏற்கனவே 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்திருப்பதாகவும் அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சுயேச்சை வேட்பாளர் அபு ஷாமாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட்டு உத்தரவின்பேரில் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே ஜுரியா பகுதியைச் சேர்ந்த 2 செய்தியாளர்கள் தன்னைப் பற்றிய செய்தியை வெளியிடாமல் இருப்பதற்காக தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக அபு ஷாமா ஒரு புகாரை அளித்துள்ளார். இந்த புகார் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.