அசாமில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர்...!
|அசாமில் நன்றாக படிக்கும், தகுதி வாய்ந்த 35,800 மாணவ மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க அரசு முடிவு செய்து ரூ.258.9 கோடி நிதியொதுக்கி உள்ளது.
கவுகாத்தி,
அசாமில் நன்றாக படிக்க கூடிய, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கவும், தொடர்ந்து உயர் கல்வியை கற்கவும் ஏதுவாக ஸ்கூட்டர் வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.
இதன்படி, தகுதி வாய்ந்த 35,800 மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 12-வது வகுப்பில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் வாங்கிய 29 ஆயிரத்து 748 மாணவிகளுக்கும், 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் வாங்கிய 6 ஆயிரத்து 52 மாணவர்களுக்கும் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.
இதற்கான முடிவானது கவுகாத்தி நகரில் ஜனதா பவனில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இந்த ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சியானது வரும் நவம்பர் 30-ந்தேதி நடைபெறும் என்றும் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள காம்ரூப் பெருநகரில் நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் அசாம் மந்திரி ஜெயந்த மல்லா பருவா கூறியுள்ளார். இதற்காக மொத்தம் ரூ.258.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.