< Back
தேசிய செய்திகள்
கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் அசாம்
தேசிய செய்திகள்

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் அசாம்: 6.5 லட்சம் மக்கள் பாதிப்பு

தினத்தந்தி
|
2 July 2024 1:25 PM IST

அசாமில் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சுமார் 6.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தின் முக்கிய நதியான பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பாய்ந்து வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அசாமில் வெள்ள நிலவரம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. வெள்ளத்தால் 20 மாவட்டங்களில் 6.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அசாமில் நிலச்சரிவு, மழை, வெள்ளம் பாதிப்புகளால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழை வெள்ளத்தால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ள லகிம்பூர் மாவட்டத்தில் மட்டும் 1.43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 1,275 கிராமங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. சுமார் 26,199.18 ஹெக்டேர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்காக 72 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 8,142 க்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து நீர்மட்டம் உயர்வதால் ஆற்றில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

திப்ரூகர், கம்ரிம், கரீட்சான்ஜ், தீமாஜி, கசர், லட்சுமிபூர், லக்கிம்பூர், கரீம்கஞ்ச், உள்ளிட்ட 20 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திப்ரூகர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 13 பேரை இந்திய கடற்படை மீட்டது.

கனமழையால் காசிரங்கா தேசியப் பூங்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 233 வன முகாம்களில் 95 வன முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதையடுத்து காட்டு யனைகள் உள்ளிட்ட விலங்குகள் சாலைகள் வழியாக இடம்பெயர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்