அசாம்: வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு
|அசாமில் 12 மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் ஊடுருவி, 2.62 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கவுகாத்தி,
அசாமில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதுதவிர, திகவ், ஜியா-பராலி, பேகி, குஷியாரா உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ள நீர் அபாய அளவை கடந்து ஓடுகிறது.
இதனால், அசாமில் 36 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 671 கிராமங்களில் உள்ள 6,546.44 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
கம்ரூப், கரீம்கஞ்ச், டின்சுகியா, கோலாகாட், தேமாஜி, மஜூலி, கச்சார், லக்கிம்பூர், திப்ருகர், சிவசாகர், கோக்ரஜார், ஜோர்ஹாட் ஆகிய 12 மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் ஊடுருவி, 2.62 லட்சம் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
1,49,009 விலங்குகளும் வெள்ள பாதிப்பில் சிக்கி உள்ளன. இந்த சூழலில், அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், தேமாஜி மாவட்டத்தில் உள்ள கோகாமுக் மற்றும் ஜோனாய் பகுதிகளில் இன்று வெள்ள நீரில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். இதனால், அசாமில் இதுவரை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்து உள்ளது.