அசாம்: ரூ.8 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
|இந்த சோதனையில் ஹெராயின் மற்றும் மெத்தம்பிடமைன் ஆகியவை 50 சோப்பு பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு கடத்தி செல்லப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
கச்சார்,
அசாமின் கச்சார் மாவட்டத்தில் போதை பொருள் கடத்தல் பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, துலாய் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாகா நகரில் லோக்நாத்பூர் என்ற இடத்தில் போலீசார் மேற்கொண்ட சிறப்பு அதிரடி சோதனையில், சந்தேகத்திற்குரிய வகையிலான 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், 50 சோப்பு பெட்டிகளில், 1.531 கிலோ கிராம் எடை கொண்ட ஹெராயின் மற்றும் 460 கிராம் மெத்தம்பிடமைன் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டு கடத்தி செல்லப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இந்த சோதனையில், கைது செய்யப்பட்ட 2 நபரிடம் நடத்திய தீவிர விசாரணையில், முக்கிய நபரான, சட்டவிரோத போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த முகமது பபுல் உத்தீன் லஸ்கர் (வயது 32) என்ற நபரை கைது செய்தனர்.
பின்பு அவர் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த போதை பொருட்கள், மிசோரமின் அய்சாவல் மாவட்டத்தில் இருந்து அசாமிற்கு கடத்தி வரப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.