கட்டாய மதமாற்றம் தொடர்பாக அசாம் கிறிஸ்தவ ஆலயங்களில் ஆய்வு நடத்தப்படுகிறதா? போலீஸ் டி.ஜி.பி. விசாரணைக்கு முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவு
|கட்டாய மதமாற்றம் தொடர்பாக அசாம் கிறிஸ்தவ ஆலயங்களில் ஆய்வு நடத்தப்படுகிறதா? என்று போலீஸ் டி.ஜி.பி. விசாரணைக்கு முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
அசாமில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் எண்ணிக்கை, மதமாற்றம் மற்றும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோர் குறித்த விவரங்களை அளிக்குமாறு மாநில சிறப்பு போலீஸ் பிரிவில் இருந்து மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதிலளிக்கையில், 'கிறிஸ்தவ ஆலயங்கள் போன்ற மத நிறுவனங்களில் ஆய்வு நடத்தும் நோக்கம் எதுவும் அரசுக்கு இல்லை. அசாமில் எத்தனை தேவாலயங்கள் உள்ளன? என்பது போன்ற தகவல்களை நாம் கேட்கக்கூடாது என்று நினைக்கிறேன். இது ஒரு குறிப்பிட்ட மத சமூகத்தின் உணர்வைப் புண்படுத்தும். இது போன்ற விஷயத்தை நாம் தவிர்க்க வேண்டும்' என்று கூறினார்.
இந்த கடிதம் முற்றிலும் தேவையற்றது என்று கூறிய முதல்-மந்திரி, அசாம் குடிமகனாக நாங்கள் அனைத்து சமூகங்களுடனும் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ விரும்புகிறோம் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
எந்தவொரு சமூகத்தினரின் மத உணர்வுகளையும் புண்படுத்த அரசு விரும்பாததால், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.யிடம் ஏற்கனவே கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.