< Back
தேசிய செய்திகள்
அசோக் கெலாட் மீது சோனியாகாந்தி கடும் அதிருப்தி; தலைவர் பதவிக்கு கார்கே உள்ளிட்டவர்கள் பெயர் பரிசீலனை
தேசிய செய்திகள்

அசோக் கெலாட் மீது சோனியாகாந்தி கடும் அதிருப்தி; தலைவர் பதவிக்கு கார்கே உள்ளிட்டவர்கள் பெயர் பரிசீலனை

தினத்தந்தி
|
28 Sept 2022 5:56 AM IST

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டவர்கள் பெயர் பரிசீலிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுடெல்லி,

ராஜஸ்தான் முதல்-மந்திரி மாற்ற விவகாரத்தில் புயல் வீசுவதால், அசோக் கெலாட் மீது சோனியா கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்கே உள்ளிட்டவர்கள் பெயர் பரிசீலிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

'ஒருவருக்கு ஒரு பதவி' என்பதில் காங்கிரஸ் கட்சி இப்போது உறுதியாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பும் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் 'ஒருவருக்கு 2 பதவி' என்ற கொள்கையை விரும்புகிறார்.

ஆனால் கட்சி மேலிடமோ அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து அகற்றி விட்டு அந்த பதவியில் சச்சின் பைலட்டை அமர்த்தி அழகு பார்க்க விரும்புகிறது.

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்துவதற்காக மேலிட தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கேயும், அஜய் மக்கானும் நேற்று முன்தினம் ஜெய்ப்பூர் சென்றிருந்தபோது, கெலாட் ஆதரவாளர்களான 82 எம்.எல்.ஏ.க்கள் மேலிட முடிவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு, முதல்-மந்திரியை தேர்வு செய்ய வேண்டும், சச்சின் பைலட்டையோ, அவருடைய ஆதரவாளரையோ அந்த பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என்பது உள்பட 3 நிபந்தனைகளை விதித்தனர். இந்த நிபந்தனைகளை தீர்மானமாக நிறைவேற்ற மேலிட பார்வையாளர்களுக்கு அழுத்தம் தந்தனர். இது அரசியல் புயலாக பார்க்கப்படுகிறது.

சோனியா அதிருப்தி

75 ஆண்டு கால காங்கிரஸ் வரலாற்றில் இப்படி ஒரு புயல் வீசியிராத நிலையில், இது மேலிட பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அவர்கள் டெல்லிக்கு திரும்பி சோனியாவிடம் நடந்ததை விளக்கினர். இது தொடர்பாக அவர்களிடம் சோனியா எழுத்துப்பூர்வமான அறிக்கையை கேட்டுள்ளார்.

ஜெய்ப்பூரில் நடந்த சம்பவம் ஒழுங்கீனமானது என கருதுகிற சோனியா, அசோக் கெலாட் மீது கடும் அதிருப்தியில் உள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

ராஜஸ்தானில் கட்சி தலைமையை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தி நிபந்தனை விதித்தவர்களுக்கு அசோக் கெலாட் பின்னணியில் இருந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், அவரது தீவிர ஆதரவாளர்களான மந்திரி சாந்தி தாரிவால், ராஜஸ்தான் காங்கிரஸ் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி உள்ளிட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலிட தலைவர்கள், கட்சி தலைமைக்கு இன்று (புதன்கிழமை) பரிந்துரைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் நிலவுகிறது.

கார்கேவுக்கு வாய்ப்பு?

ராஜஸ்தான் நிகழ்வின் பின்னணியில் அசோக் கெலாட் இருப்பதாக கருதி அவர் மீது சோனியா கடும் அதிருப்தியில் உள்ளதால், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இது எதிரொலிக்கும், அசோக் கெலாட்டுக்கு தலைவர் பதவி எட்டாக்கனியாகி விடும் என கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, கமல்நாத். திக்விஜயசிங், சுஷில் குமார் ஷிண்டே, முகுல் வாஸ்னிக், குமாரி செல்ஜா ஆகியோரது பெயர்கள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மேலிடத்தால் இப்போது பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்