வெளியூர்களில் இருந்து ஓட்டு போடுவதற்காக பாட்னாவுக்கு திரும்பும் பீகார்வாசிகள்
|நாடாளுமன்ற 7-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.
பாட்னா,
பீகாரின் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் வசித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் பாட்னா சாகிப் மற்றும் பாடலிபுத்ரா என 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் ஓட்டுப்போடுவதற்காக வெளியூர்களில் வசிக்கும் பாட்னாவாசிகள் கடந்த சில நாட்களாக அலையலையாக சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, 'இது பல வகைகளில் ஜனநாயக திருவிழா என்று கூறுகிறார்கள். ஆனால் குடியுரிமை மற்றும் பங்கேற்பு ஜனநாயகத்தில் உங்கள் குரலை வெளிப்படுத்த அனுமதிக்கும் முக்கியமான நிகழ்வு இது' என்று தெரிவித்தனர். பாட்னாவில் இருந்து மும்பை கல்லூரியில் பணியாற்றும் ஷீமா பாத்திமா என்பவர் கூறுகையில், 'இது ஒரு முக்கியமான தேர்தல். இதில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம்' என்றார்.
பாட்னா சாகிப் தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பா.ஜனதா சார்பில் மீண்டும் களமிறங்கி இருக்கிறார். இவரை எதிர்த்து முன்னாள் சபாநாயகர் மீரா குமாரின் மகன் அன்சுல் அவிஜித்தை இந்தியா கூட்டணி களமிறக்கி இருக்கிறது. அதேநேரம் பாடலிபுத்ரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ராம்கிரிபால் யாதவை எதிர்த்து லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி மல்லுக்கட்டுவது குறிப்பிடத்தக்கது.