< Back
தேசிய செய்திகள்
திகார் சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்தார் பஞ்சாப் முதல்-மந்திரி பகவத் மான்
தேசிய செய்திகள்

திகார் சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்தார் பஞ்சாப் முதல்-மந்திரி பகவத் மான்

தினத்தந்தி
|
30 April 2024 4:15 PM IST

திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என்று பஞ்சாப் முதல்-மந்திரி பகவத் மான் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், அமலாக்கத்துறை காவலில் வைத்து 10 நாட்கள் விசாரிக்கப்பட்டார். இதையடுத்து, நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலை பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவத் மான் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

"கெஜ்ரிவால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் இன்சுலின் பெறுகிறார். பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை உற்பத்தி குறித்து என்னிடம் கேட்டார். அதேபோல் மின்சார வினியோகம் குறித்தும் கேட்டறிந்தார். பஞ்சாப் மாநிலத்தின் அரசு பள்ளியில் படித்த 158 மாணவர்கள் ஜே.இ.இ. முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்.

நான் சமீபத்தில் குஜராத் சென்றிருந்தேன். அதுகுறித்து கேட்டறிந்தார். ஆம் ஆத்மிக்கு குஜராத்தில் மனதை கவரும் வகையில் ஆதரவு இருப்பதாக தெரிவித்தேன். அரசியலமைப்பு பாதுகாப்பதற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற தகவலை என்னிடம் தெரிவித்தார். எங்களுடைய அனைத்து தலைவர்களும் ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார்கள்."

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, நேற்று திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் டெல்லி மந்திரி அதிஷி ஆகியோர் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்