< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் பா.ஜ.க.வினருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு
தேசிய செய்திகள்

குஜராத்தில் பா.ஜ.க.வினருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு

தினத்தந்தி
|
4 Sept 2022 2:11 AM IST

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு வேலை செய்யுமாறு பா.ஜ.க.வினருக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

குஜராத்தில் கெஜ்ரிவால்...

பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு தேர்தலுக்கு முன்பாக தனது கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இறங்கி உள்ளார். அங்கு அவர் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அழைப்பு

குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் நேற்று கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாங்கள் பா.ஜ.க. தலைவர்கள் எங்களிடம் வர வேண்டும் என விரும்பவில்லை. பா.ஜ.க. தனது தலைவர்களை தன்னிடம் வைத்துக்கொள்ளட்டும்.

கிராமங்களில், பூத்துகளில், தாலுகாக்களில் வாக்காளர்களுடன் நேரடி தொடர்பில் உள்ள பா.ஜ.க. தொண்டர்கள் எங்களுடன் வந்து சேர்கிறார்கள். இத்தனை ஆண்டு காலம் பா.ஜ.க.வில் சேவையாற்றினீர்களே, கட்சி உங்களுக்கு திரும்பச்செய்தது என்ன என்று அவர்களை கேட்க விரும்புகிறேன்.

நீங்கள் (பா.ஜ.க. தொண்டர்கள்) அந்த கட்சியிலேயே இருங்கள். ஆனால் எங்கள் கட்சிக்கு வேலை செய்யுங்கள். உங்களில் பலருக்கு கட்சி பணம் தரலாம். அதைப் பெற்றுக்கொண்டு எங்களுக்கு வேலை செய்யுங்கள். ஏனென்றால் எங்களிடம் பணம் இல்லை.

இலவச மின்சாரம்

நாங்கள் (இங்கு) ஆட்சி அமைக்கிறபோது, இலவச மின்சாரம் தருவோம். இது உங்கள் வீடுகளுக்கும் கிடைக்கும். அதுவும் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் தருவோம். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடங்களை கட்டுவோம். அவர்களுக்கு இலவச கல்வி கிடைக்கும்.

உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தரமான, இலவச சிகிச்சை அளிக்க உறுதி செய்வோம். உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு ரூ.1,000 அலவன்ஸ் தருவோம்.

'நாங்கள் காங்கிரஸ் அல்ல'

குஜராத்தில் எங்கள் கட்சி பொதுச்செயலாளர் மனோஜ் சோரதியா தாக்கப்பட்டுள்ளார். இது பா.ஜ.க. விரக்தியில் உள்ளது என்பதை காட்டுகிறது. அந்த கட்சிக்கு என்ன செய்வது என தெரியவில்லை.

ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சி போல அல்ல. ஆளும் கட்சியால் எங்களை மிரட்ட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்