மணிஷ் சிசோடியா கைதுக்கு அரசியல் அழுத்தமே காரணம் - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
|மணிஷ் சிசோடியா அரசியல் அழுத்தம் காரணமாக கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகளே விரும்பவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
தேர்தல் வெற்றிக்கு காரணம்
டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து வருகிறார். இதற்கிடையே, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது. சத்யேந்தர் ஜெயினும், மணிஷ் சிசோடியாவும் ஆம் ஆத்மியின் தேர்தல் வெற்றிகளுக்கு காரணகர்த்தாக்களாக பார்க்கப்படுகிறார்கள்.அதனால் அவர்களது கைது நடவடிக்கை, ஆம் ஆத்மிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்தநிலையில், சிசோடியா கைதுக்கு எதிராக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
அரசியல் எஜமானர்கள்
மணிஷ் சிசோடியாவை கைது செய்ய பெரும்பாலான சி.பி.ஐ. அதிகாரிகள் விரும்பவில்லை. அவர்கள் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அவருக்கு எதிராக ஆதாரமும் இல்லை. ஆனால், சிசோடியாவை கைது செய்ய அரசியல் அழுத்தம் பெரிதாக இருந்தது. தங்கள் அரசியல் எஜமானர்களின் உத்தரவுக்கு அவர்கள் அடிபணிய வேண்டியதாகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா மறுப்பு
அதே சமயத்தில், அவரது குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா மறுப்பு தெரிவித்துள்ளது. பா.ஜனதா எம்.பி. மனோஜ் திவாரி கூறியதாவது:-
அரவிந்த் கெஜ்ரிவால் பொய் செய்திகளை பரப்புவதில் வல்லவர். இப்படித்தான் குஜராத்தில் சர்வதேச எல்லை தொடர்பாக போலி செய்தி பரப்பியது அம்பலமானது. எனவே, சட்டம் தனது கடமையை செய்யவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாடு முழுவதும் போராட்டம்
இதற்கிடையே, மணிஷ் சிசோடியா கைதை கண்டித்து நாட்டின் பல மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி போராட்டம் நடத்தியது. டெல்லியில் சி.பி.ஐ. அலுவலகம் அருகே போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங், டெல்லி மந்திரி கோபால் ராய் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு இடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ரோகித்குமார் மெராலியா, தினேஷ் மொகானியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். வெளிமாநிலங்களில் உள்ள சண்டிகார், போபால் உள்ளிட்ட நகரங்களிலும் ஆம் ஆத்மி சார்பில் போராட்டம் நடந்தது.
துணை ராணுவம் குவிப்பு
டெல்லியில் தீனதயாள் உபாத்யாயா மார்க்கில் பா.ஜனதா தலைமையகம் உள்ளது. அதன் எதிரே மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ஆம் ஆத்மி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தொகுதிக்கு 200 பேர் வீதம் போராட்டத்துக்கு அழைத்து வருமாறு ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் ஆம் ஆத்மி மேலிடம் உத்தரவிட்டு இருந்தது.
அந்த போராட்டத்தை முறியடிப்பதற்காக தீனதயாள் உபாத்யாயா மார்க் செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டன போலீசாரும், துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டனர். ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன. அதே பகுதியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. சி.பி.ஐ. தலைமையகத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்பதாக ஆம் ஆத்மி அறிவித்தது. கட்சியின் 80 சதவீத தலைவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக ஆம் ஆத்மி கூறியது. ஆனால் போலீசாரோ, கைது செய்யப்பட்டவர்கள், விடுதலை செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
அகிலேஷ் யாதவ்
மணிஷ் சிசோடியா கைது செய்யபட்டதற்கு சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டு வந்த மணிஷ் சிசோடியாவை கைது செய்ததன் மூலம், தாங்கள் கல்விக்கு மட்டுமின்றி, குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் எதிரானவர்கள் என்று பா.ஜனதா நிரூபித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பா.ஜனதாவை தோற்கடித்து மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.