அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6-வது முறை சம்மன் - அமலாக்கத்துறை
|என்னை கைது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சம்மன் அனுப்பப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.
இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. ஆனால் இதுவரை 5 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. தனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது. அதை திரும்பப் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
5 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் தற்போது 6-வது முறையாக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 19-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த முறையும் அவர் ஆஜராவாரா என்பது தெரியவில்லை. தன்னை கைதுசெய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சம்மன் அனுப்பப்படுகிறது என கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி நீதித்துறை, சட்டம் ஒழுங்குக்கு எதிராக செயல்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டை கூட மதிக்கவில்லை என பா.ஜ.க.செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா குற்றம் சாட்டியுள்ளார்.