'இந்தியா' கூட்டணி பிரதமர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலை நிறுத்த வேண்டும் - ஆம் ஆத்மி 'திடீர்' கோரிக்கை
|மும்பையில் இன்று ‘இந்தியா’ கூட்டணி கூட்டம் நடக்கும் நிலையில், அதன் பிரதமர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலை நிறுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி திடீரென கோரிக்கை விடுத்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் பிரியங்கா கக்கர், ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவரிடம், 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக யார் நிறுத்தப்பட வேண்டும்? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பிரியங்கா கக்கர் கூறியதாவது:-
ஆம் ஆத்மி செய்தித்தொடர்பாளர் என்ற முறையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று நான் கூறுகிறேன்.
அவர் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளை எழுப்பி வருகிறார். மக்களுக்கு சாதகமான, லாபகரமான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
பணவீக்கம் குறைவாக உள்ள டெல்லி மாடலை அளித்துள்ளார். ஒட்டுமொத்த நாடும் பலன் அடையக்கூடிய மாடலை தந்துள்ளார். எனவே, அவர் பிரதமர் வேட்பாளராக நிறத்தப்பட வேண்டும். ஆனால் அது என் கைகளில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரியும், கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளருமான கோபால் ராய் கூறியதாவது:-
ஒவ்வொரு கட்சியும் தங்கள் தலைவரை பிரதமராக பார்க்க ஆசைப்படும். அதுபோல், ஆம் ஆத்மி உறுப்பினர்கள், அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமராக பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
ஆனால், இதுபற்றி 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஒன்றாக அமர்ந்து பேசித்தான் முடிவு செய்ய வேண்டும். அங்கு என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், டெல்லி பெண் மந்திரி அடிஷி, வேறுவிதமாக கூறினார். அவர் கூறியதாவது:-
பிரதமர் பதவிக்கான போட்டியில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லை. இதை நான் அதிகாரபூர்வமாக கூறுகிறேன். அரசியல் சட்டம், ஜனநாயகம் ஆகியவற்றை காப்பாற்றவே அவர் இந்தியா கூட்டணியில் சேர்ந்தார். எனவே, பிரியங்கா கக்கர் சொன்னது அவரது சொந்த கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
'இந்தியா' கூட்டணியின் 3-வது கூட்டம் இன்றும், நாளையும் மும்பையில் நடக்கிறது. அதில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுக்கப்படுகிறது. இந்த நிலையில், ஆம் ஆத்மி நிர்வாகிகள், இத்தகைய கருத்துகளை தெரிவித்துள்ளனர்.