< Back
தேசிய செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் திடீர் அழைப்பு: வேறு பணி இருப்பதாக கெஜ்ரிவால் பதில்..!!
தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் திடீர் அழைப்பு: வேறு பணி இருப்பதாக கெஜ்ரிவால் பதில்..!!

தினத்தந்தி
|
26 Jan 2023 11:50 PM GMT

தன்னை சந்திக்க வருமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தான் பஞ்சாப் செல்ல இருப்பதாக கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களை பின்லாந்து நாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்ப டெல்லி அரசு எடுத்த முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 16-ந் தேதி, கவர்னர் மாளிகைக்கு அரவிந்த் கெஜ்ரிவாலும், மந்திரிகளும் பேரணி சென்றனர். ஆனால், கவர்னர் சந்திக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

அழைப்பு

கவர்னர், தனக்கு தலைமை ஆசிரியர் போல் நடந்து கொள்வதாக சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். அதை கவர்னர் மறுத்தார்.

கவர்னரை வெள்ளிக்கிழமைதோறும் முதல்-மந்திரி சந்திப்பது வழக்கம். ஆனால், இந்த மோதலால் இச்சந்திப்பு சில வாரங்களாக நடக்கவில்லை. இந்த பின்னணியில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று திடீரென அழைப்பு விடுத்தார். மந்திரிகள், 10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு வந்து தன்னை சந்திக்குமாறு அவர் கூறியுள்ளார்.

பஞ்சாப் செல்கிறேன்

ஆனால், இந்த அழைப்பை அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கவில்லை. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கவர்னரின் அழைப்புக்கு நன்றி. வெள்ளிக்கிழமை பஞ்சாப் செல்கிறேன். அங்கு 400 மக்கள் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறேன். ஆகவே, வேறு தேதியில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கவர்னரை கேட்டுக்கொண்டுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்