< Back
தேசிய செய்திகள்
மதுபான முறைகேடு வழக்கு: ஜாமீன் கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல்
தேசிய செய்திகள்

மதுபான முறைகேடு வழக்கு: ஜாமீன் கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல்

தினத்தந்தி
|
30 May 2024 1:54 PM IST

முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.அவருக்கு கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக இந்த ஜாமீனை வழங்கிய நீதிபதிகள், வருகிற ஜூன் 2-ந்தேதி சரணடைந்து மீண்டும் அவர் சிறை செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த ெகஜ்ரிவால் நாடாளுமன்ற தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இதற்கிடையே தனக்கு சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 26-ந்தேதி கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியிருப்பதால், 2-ந்தேதிக்கு பதிலாக 9-ந்தேதி சரணடைய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு இருந்தார்.

இந்த மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறை கால அமர்வு முன்பு நேற்று முன்தினம் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, கெஜ்ரிவாலின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது தொடர்பான மனு ஒன்றையும் அவர் அளித்தார்.அப்போது, கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள பிரதான வழக்கின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் இந்த மனுவை பட்டியலிடுவது தொடர்பான முடிவை தலைமை நீதிபதி எடுப்பார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக்கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்கக்கோரும் கெஜ்ரிவாலின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் நேற்று நிராகரித்தார்.இந்த விவகாரத்தில் வழக்கமான ஜாமீன் கோரி விசாரணை கோர்ட்டை கெஜ்ரிவால் அணுக முடியும் என்பதால், அவரது வழக்கை அவசரமாக விசாரிக்க பட்டியலிட முடியாது என பதிவாளர் அறிவித்தார்.

இந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். கெஜ்ரிவாலின் மனு மீதான விசாரணை இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது. கெஜ்ரிவால் தனது கைதை எதிர்த்துதான் இதற்கு முன்பு மனு தாக்கல் செய்து இருந்தார். தற்போதுதான் முதல் முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்