அருணாச்சல பிரதேசம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்
|இட்டாநகரில் உள்ள மருத்துவமனையில் போசம் கிம்மன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இட்டாநகர்,
அருணாச்சல பிரதேச மாநிலம் சங்லாங் மாவட்டத்தில் உள்ள தெற்கு சங்லாங் தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. போசம் கிம்மன். இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இட்டாநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி போசம் கிம்மன் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 63. கடந்த 2004-ம் ஆண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற போசம் கிம்மன், 2009-ம் ஆண்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தொடர்ந்து 2014-ம் ஆண்டு அருணாச்சல பிரதேச மக்கள் கட்சி(பி.பி.ஏ.) சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். இதன் பின்னர் பா.ஜ.க.வில் இணைந்த போசம் கிம்மன், 2019-ல் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பேமா கண்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.