< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்படுமா?
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்படுமா?

தினத்தந்தி
|
6 Jan 2023 3:07 AM IST

கர்நாடகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.

வரலாற்று தலங்கள்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத்துறையின் பங்கு மிக முக்கியமானது. பிற நாடுகளை போல் அல்லாமல் இந்தியா முற்றிலும் வேறுபட்டது. நமது நாட்டின் பன்முக கலாசாரம், பண்பாடு, ஆன்மிக வழிபாடு, நாகரிகம் போன்றவற்றை அறிந்து கொள்வதில் வெளிநாட்டினர் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால் வெளிநாட்டினர் அதிக எண்ணிக்கையில் இந்தியாவுக்கு சுற்றுலா வருகிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு வெளிநாட்டினர் 1.23 லட்சம் பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர்.

இந்த எண்ணிக்கை கடந்த 2022-ம் ஆண்டு அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மத்தியிலும் அதாவது கடந்த ஆண்டு சுமார் 3½ லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் இங்கு முக்கியமான வரலாற்று தலங்களை நேரில் பார்த்து நமது கலாசாரத்தை அறிந்துள்ளனர். கர்நாடகத்தை பொறுத்தவரையில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் பேர் சுற்றுலா வருகிறார்கள். அவர்களின் முதல் விருப்பமான தலமாக மைசூரு திகழ்கிறது. அது கர்நாடகத்தின் கலாசாரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கலாசார நகரம்

கர்நாடகத்தில் முக்கியமாக மைசூரு, பல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹம்பி, மங்களூரு, உடுப்பி, சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு போன்றவை முக்கிய சுற்றுலா நகரங்களாக திகழ்கிறது. கலாசார நகரமான மைசூருவில் மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை, வன விலங்குகள் பூங்கா, சாமுண்டீஸ்வரி கோவில் போன்றவை உள்ளது. சிவமொக்காவில் உலக புகழ் பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி இருக்கிறது.

மங்களூருவில் கடற்கரை, கோவில்கள், துறைமுகம் போன்றவை உள்ளது. உடுப்பியிலும் புகழ்பெற்ற கடற்கரை உள்ளது. அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சிவமொக்காவின் ஜோக் நீர்வீழ்ச்சி, ஹம்பியில் விஜயநகர பேரரசு இருந்த காலத்தில் கட்டப்பட்ட கோவில், கல் ரதம் உள்ளது. இது இந்திய பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

அடிப்படை வசதிகள்

இதை தவிர்த்து பெங்களூருவில் புகழ்பெற்ற லால்பாக், கப்பன் பார்க், மைசூரு மன்னரின் அரண்மனை, விதான சவுதா போன்ற தலங்கள் உள்ளன. இந்த தலங்களுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த சுற்றுலா தலங்களில் சுற்றுலாவாசிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

மிகவும் அசுத்தமானது

பெங்களூரு பிரகாஷ்நகரை சேர்ந்த சரவணகுமார் கூறுகையில், "நான் அவ்வப்போது சுற்றுலா செல்வது உண்டு. குழுவாக கூடியும் சுற்றுலா செல்கிறோம். சுற்றுலா தலங்களில் சுற்றுலாவாசிகளுக்கு தேவையான வசதிகள் குறைவாக உள்ளன. குடிநீர், கழிவறை போன்றவை உள்ளது. அதை அந்த வசதிகள் போதாது. அவற்றை இன்னும் அதிகரிக்க வேண்டும். கழிவறைகள் இருந்தாலும், அவை மிகவும் அசுத்தமாக உள்ளது. அந்த கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலா தலங்களில் ஆங்காங்கே பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையங்களை அமைக்க வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும்" என்றார்.

ராமசந்திரபுரத்தை சேர்ந்த ஏழுமலை கூறுகையில், "கர்நாடகத்தில் நான் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளேன். கோவில்கள் இருக்கும் பகுதிகளில் குடிநீர், கழிவறை போன்ற வசதிகள் நிறைவாக செய்துள்ளனர். அங்கு அடிப்படை வசதிகள் 80 சதவீதம் நன்றாக உள்ளன. ஆனால் சுற்றுலா தலங்களில் குடிநீர், கழிவறை வசதிகள் சற்று குறைவாக தான் உள்ளன. அவற்றை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். லால்பாக்கின் உள்பகுதியில் குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கப்பன்பார்க்கில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

மைசூரு அரண்மனை

மைசூருவில் உள்ள பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான மைசூரு அரண்மனைக்கு சுற்றுலா வந்திருந்த சென்னையைச் சேர்ந்த விவேக் கூறுகையில், நான் குடும்பத்துடன் சென்னையில் இருந்து மைசூருவுக்கு சுற்றுலா வந்துள்ளேன். இங்குள்ள சீதோஷ்ண நிலை சென்னையை விட மிகவும் அருமையாக உள்ளது. இங்குள்ள இடங்கள் அனைத்தும் பார்க்க அழகாக இருக்கிறது. இங்கு போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆட்டோவிலேயே எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். இங்குள்ள இடங்கள் அனைத்தும் கண்கொள்ளா காட்சியாக உள்ளன. நான் குடும்பத்துடன் சேர்ந்து அனைத்து இடங்களையும் கண்டு ரசித்தேன்.

நாங்கள் ஒரு பஸ்சில் மொத்தமாக சுற்றுலா வந்துள்ளோம். வாகன நிறுத்த வசதி, சுற்றுலா தலங்களில் நுழைவு கட்டணம் என அனைத்தையும் அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். முதல்முறையாக மைசூருவுக்கு வந்துள்ளேன். இங்குள்ள கட்டுப்பாடுகள், விதிமுறைகள் எனக்கு தெரியாது. மைசூருவில் அனைத்து இடங்களும் தூய்மையாக, சுகாதாரமாக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மராட்டிய மாநிலத்தில் இருந்து மைசூருவுக்கு சுற்றுலா வந்திருந்த பிரபாத்-சிந்தே தம்பதிகள் கூறுகையில், மைசூருவில் இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. குளிர்ந்த சீதோஷ்ண நிலையை இங்கு அனுபவிக்க முடிகிறது. விலங்குகள் இயற்கை சூழலில் சுற்றித்திரிவதை இங்குள்ள உயிரியல் பூங்காவில் பார்த்தோம். மற்ற நகரங்களை விட மைசூரு நகரம் தூய்மையாக இருக்கிறது. மேலும் மக்கள் இங்கு தூய்மையை காப்பாற்றுகிறார்கள். அது பெருமையாக இருக்கிறது. ஆனால் வாகன நிறுத்தம் வசதி இல்லை. சில இடங்களில் பிரச்சினை செய்கிறார்கள். சில இடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். இது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜோக் நீர்வீழ்ச்சி

ஆந்திராவில் இருந்து மைசூருவுக்கு குழுவாக வந்திருந்தவர்கள் கூறுகையில், மைசூருவை பற்றி பேச பெருமையாக இருக்கிறது. இது தூய்மை நகரம். நேரில் பார்த்தால் ஆச்சரியப்படும் வகையில் இந்த நகரம் இருக்கிறது. குடிநீர், கழிவறை வசதி சுகாதாரமாக உள்ளது. பஸ் வசதி, உணவு வசதி என அனைத்தும் உள்ளது. இங்குள்ள நாட்டாமை வண்டிகள் குதிரை வண்டிகள் போல இருக்கிறது. அதில் சவாரி செய்வது மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஓட்டல், தங்கும் விடுதிகள் இல்லை

சிவமொக்கா டவுன் கிளார்க்பேட்டை பகுதியில் வசித்து வரும் வியாபாரியான முரளி என்பவர் கூறுகையில், சிவமொக்காவில் ஜோக் நீர்வீழ்ச்சி உள்பட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. கர்நாடகத்தில் உள்ள சுற்றுலா தலங்களைக் காண உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது தற்போது அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை கர்நாடக மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும். எனது தந்தை கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பே ஜோக் நீர்வீழ்ச்சி பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தியவர் ஆவார். சுற்றுலா பயணிகளுக்காக தங்கும் விடுதி வசதி, கார், பஸ் வசதி, வாகன நிறுத்தும் இடம், தரமான ஓட்டல் வசதி என அனைத்து வசதிகளும் முக்கியம். ஜோக் நீர்வீழ்ச்சியின் நுழைவு வாயில் பகுதியிலும், நீர் விழும் பகுதியிலும் அரசு சார்பில் தரமான விடுதி, ஓட்டல் கட்டினால் அது சுற்றுலா பயணிகளை மேலும் கவர்ந்திழுக்கும். விரைவில் இங்கு ரோப்கார் வசதியும் அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு வசதி இல்லை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவைச் சேர்ந்த சுற்றுலா கார் டிரைவர் ரவி கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் சுற்றுலா துறை முடங்கி கிடந்தது. ஆனால் இந்த ஆண்டு வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். ஆனால் ஒருசில இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளில் குறைபாடுகள் உள்ளது. குறிப்பாக மங்களூரு கடற்கரையோரங்கள் அசுத்தமாக உள்ளன. அங்கு வாகன நிறுத்தம் வசதியும் இல்லை. மேலும் அங்கு வாகனம் நிறுத்த கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். சுற்றுலா தலங்களுக்கு செல்ல வழிகாட்டி பலகைகள் அவசியம். அதனை சரியான இடங்களில் வைக்க வேண்டியது அரசு மற்றும் சுற்றுலா துறையின் முக்கிய பணி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உத்தர கன்னடா மாவட்டம் 112 அடி உயர சிவன் சிலை உள்ள கோகர்ணா கடற்கரைக்கு தமிழ்நாடு மதுரையில் இருந்து சுற்றுலா வந்திருந்த நாகேந்திரன் என்பவர் கூறுகையில், கர்நாடகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். இருப்பினும் கடற்கரையோரத்தில் கழிவறை இல்லை. நடமாடும் கழிவறை அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதனால் விரைவில் இங்கு சுற்றுலா பயணிகள் வசதிக்காக நடமாடும் கழிவறைகளை வைக்க வேண்டும். கடற்கரையில் போதுமான பாதுகாப்பு வசதிகளும் இல்லை. அதை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரோப்கார் வசதி வேண்டும்

சிக்கமகளூரு மாவட்டம் முல்லையன்கிரிக்கு தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து சுற்றுலா வந்திருந்த தனியார் ஆங்கில பள்ளியின் தலைவர் பத்மாவதி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக எங்கள் பள்ளி மாணவ-மாணவிகளும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் ஒன்று சேர்ந்து சிக்கமகளூருவுக்கு சுற்றுலா வந்து செல்கிறோம். அதேபோல இந்த முறையும் வந்து மகிழ்ச்சியாக இயற்கை அழகை கண்டு ரசித்தோம். முல்லையன்கிரியில் கழிவறை வசதி இல்லை. மலைப்பாதையில் படிக்கட்டுகள், கம்பி வேலி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. குடிநீர் வசதி இல்லை. மேலும் மலையில் ஏறி இயற்கையை ரசிக்க காட்சி முனை பகுதியும் இல்லை. சாலைகள் மிகவும் குறுகளாக உள்ளன. சில இடங்கள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. இங்கு ரோப்கார் வசதி அமைத்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆண்டுதோறும் கர்நாடக அரசு சார்பில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர், தங்குமிடம், கழிவறை வசதிகள், உடைமாற்றும் அறைகள், இருக்கை வசதிகள் இல்லாமல் உள்ளது. சில சுற்றுலா தலங்களில் இருக்கைகள், கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளை அரசு களைந்தால், சுற்றுலா துறை மேம்படுவதுடன் வருவாய் அதிகரிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

மேலும் செய்திகள்